செப்ரம்பர் 11 2001 ல் இடம்பெற்ற அவலம் உலக மக்கள் யாரினாலும் மறக்கப்பட முடியாத நாளாக அதனை ஆக்கியது. உலக ஊடகங்களின் கமராக்கள் உயிரோட்டமாக நேரடி ஒளிபரப்புச் செய்ய அவ்அவலம் நடந்தேறியது. ஆதற்குப் 12 ஆண்டுகளுக்கு முன் அவ்விடத்திற்கு பல்லாயிரம் மைல்கள் தொலைவில் யாழ்ப்பாணத்திலும் ஒரு அவலம் நிகழ்ந்தது. ஆம் 1998 செப்ரம்பர் 11ல் இடம்பெற்ற தாக்குதலில் யாழ்ப்பாண மாநகரின் மேயர் பொன் சிவபாலன் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் அவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால ஆயதவன்முறை அழிவுகளையும் அவலங்களையுமே மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளது.
பொன் சிவபாலன் போன்ற நேர்மையான அளுமைகளை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றனர். அல்லது அவாறானவர்கள் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறான ஆளமைகளுக்கான பாரிய வெற்றிடம் தமிழ் சமூகத்தில் இன்று தோன்றியுள்ளது.
போன் சிவபாலன் பற்றிய சில நினைவுக் குறிப்புகளையும் ஆர் எப் அஸ்ரப் அலி யினுடைய கட்டுரையும் இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது.
._._._._._.
யாருக்கும் எந்த ஜீவராசிக்கும் தீங்கும் இழைக்காத எனது பாசம் கொண்ட அண்ணனை ஈசியாக சிம்பிளாக கொன்றுவிட்டு இருக்கிறார்கள். ஒரு அண்ணனாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசாணாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கடவுளாக நானும் எனது குடும்பமும் மதித்தவரை கொன்றுவிட்டார்கள். எத்தனை குடும்பங்களில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கும் போது அரசியல்வாதி தலைவன். ஆனால் எனக்கு சகோதரன் ஒரு உறவின் இழப்பு அதன் வலியும் அதிகம். நாங்கள் இன்னமும் இதிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இந்த இழப்புகளில் இருந்து மீளப் போகின்றோம் என்பதும் தெரியவில்லை.
பொன் சிவகுமார் – பொன் சிவபாலனின் சகோதரர் தேசம் ஏற்பாடு செய்த அவருடைய 10வது நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சிறுபகுதி. – செப்ரம்பர் 14 2008
._._._._._.
எனது 15 ஆவது வயதில் 98 ஆம் ஆண்டில் உங்களது அண்ணனின் மரணம் நடைபெற்றது. அந்நேரத்தில் நான் யாழ்ப்பாணத்தில் மாணவனாக இருந்தேன். கட்டமைக்கப்பட்ட மனநிலை காரணமாக அந்நேரத்தில் நாம் சந்தோசப்பட்டதாக ஞாபகம். ஆயினும் அன்று அச்செய்தியைப் பற்றி அப்பாவுடன் பேசும் போது, அப்பா அம்மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பாவின் கூட்டணியுடனான மென்போக்கு அவர் இதனை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அன்று என்மனதில் இருந்தது. ஆயினும் எனது வயது காரணமாக அப்பா எனக்கு விளக்கம் எதனையும் சொல்லவுமில்லை. அரசியல் பற்றிய உரையாடல்களை சூழல் நமக்கு அனுமதிக்கவும் இல்லை.
சில காலங்களின் பின்பு ‘கொலை’ களின் மோசமான முகம் எமக்கு பிடிபடத் தொடங்கிற்று. ஒரு உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை நாம் எவ்வளவு வன்மையாகக் ஆதரிக்க வேண்டும் என்பதான மனநிலையை பிரிவிகளும் கொலைகளும் எமக்கு அனுபவ பூர்வமாக உணர்த்தியது. சகலவிதமான கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகவும் ஒருவன் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையை, எமது சூழல் எம்மீது கட்டமைத்துக் கொண்டிருக்கும் வலைப்பின்னல்களை மீறி வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது. கொலைகளைக் கொண்டாடும் சமூகத்தில் இருந்து- அதன் அங்கமாக இருந்தவாறு அதனை எதிர்ப்பதற்காக நாம் போராட வேண்டியிருக்கிறது. உங்களது தலைமுறை அல்ல நமது தலைமுறை. ‘கலவரத்தில்’ பிறந்து போராட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கொலைகளுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்கு நாம் அரசியல் எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இன்றைய இளைய சமூகச்சூழலை வைத்துச் சொல்கின்றேன். இச்சூழலில் அம்மனநிலையை வளர்த்துக் கொள்வதின் கடினம் உங்களில் யாருக்கும் புரிபடாதது. இது தோடர்பாக தமிழ்சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள்ளது.
பொன். சிவகுமார் அவர்களுக்குஇ நான் சிறுவயதில் உங்களது அண்ணனது இறப்பில் சந்தோசப்பட்டேன் என்ற குற்றவுணர்வுடன் தான் இதை எழுதத் தொடங்கினேன். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். மன்னிப்பீர்கள் என நம்புகின்றேன்.
சேகர் பொன் சிவகுமாரின் பிரிவுத் துயர் தொடர்பாக 2008ல் எழுதப்பட்ட குறிப்பு
._._._._._.
பொன்.சிவபாலன் யாழ் மேயராக இருந்து புலிகளின் குண்டுக்குப் பலியானவர். எனது மிக நெருங்கிய நண்பர், தமிழுணர்வு நிறைந்தவர், எழுபதின் கடைசிகளில் என் நண்பரானவர், அப்போ அவர் சட்டக்கல்லூரி மாணவர். இன்றும் என் மனதை விட்டகலாத ஒரு நிகழ்ச்சி அவரும் நானும் வேறு நண்பர்களும் யாழ் சிறீதர் தியேட்டரில் இரண்டாவது ஷோ படம் பார்த்து விட்டு பலாலி வீதியால் வந்து கொண்டிருக்கிறோம் ஆரியகுளம் சந்தியில் இரண்டு சிங்களப் பொலிசார் லைற் இல்லாமல் போவோருக்கு இருட்டில் நின்று வெளுக்கிறார்கள். எமக்கு முன்னால் போனோர் சைக்கிள்களை போட்டுவிட்டு சிதறி ஓடுகிறார்கள். சிவபாலன் திடீரென தன் சைக்கிளை போட்டு விட்டு சிங்களத்தால் ஏதோ கத்தியபடி பொலிசை நோக்கி நடக்க பயந்து ஓடியவர்களும் இப்போ பொலிசை நோக்கி திரும்பி வர பொலிசார் பயந்து ஏதோ மென்மையாக சொன்னபடி தமது சைக்கிளில் அந்த இடத்தை விட்டு மாறிவிட்டார்கள். இது நடந்தது 78ல் என்று நினைக்கிறேன். பின் எண்பதின் தொடக்கத்தில் நான் நாட்டை விட்டு வெளியேற சில வருடங்களில் அவருடனான தொடர்பும் அற்றுவிட்டது. பின் அவர் மேயரானது அதைத் தொடர்ந்து அவரின் மரணம் எல்லாம் செய்திகள் மூலம் அறிந்ததுதான். பின் எமது நண்பர் ஒருவருடன் பேசும் போது சொன்னார் தான் சிவபாலன் மேயராக இருக்கும் போது அவருடன் கதைத்ததாகவும் அவர் தான் ஏற்றிருக்கும் பதவியின் ஆபத்தை அறிந்திருந்ததாகவும் ஆனாலும் எல்லோரும் பயந்து ஒதுங்கினால் யார் மக்களின் தேவைகளை கவனிப்பதென்று கேட்டதாகவும் சொன்னார். தேசத்தின் ஊடாக இதை எழுதியதின் மூலம் என் இனிய நண்பன் சிவபாலனுக்கு அஞ்சலி செலுத்தியதான ஒரு மனநிறைவு.
அக்கு (தேசம்நெற் கருத்தாளர்) பெப்ரவரி 8 2009
._._._._._.
போல் சத்தியநேசன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள், புத்திஜீவிகள், சமூகவிரும்பிகள் என்று தமிழினத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈகம் செய்த அனைவரும் மண்ணின் மைந்தர்களாக கௌரவிக்கப்பட வேண்டும். இன்றையதினம் மேயர் சிவபாலன் அவர்களை நான் மண்ணின் மைந்தராக கெளரவிக்கின்றேன். இவர்போன்று படுகொலை செய்யப்பட்ட அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும்
கவன்சிலர் போல் சத்தியநேசன் (செப்ரம்பர் 14 2008)
._._._._._.
I know him around 4 years when I lived in Borrella,Colombo.He is a gentlemen,always give respect for every one.As good friend of my father,he always advice me so many things.I really miss him,when I hear that he was killed in jaffna,I was in a shock for around a week.Still I got a foto we took together with Mr.Neelan Thiruchelvam and Sivapalan Anna.He will be rememberd all in my life.Om shanthi,Shanthi.
M.Muhunthan Sep 12, 2008
._._._._._.
யாழ்.மாநகர முன்னாள் மேயர் பொன் சிவபாலன் – மகோன்னதமான ஒரு அரசியல்வாதி : ஆர். எப். அஷ்ரப் அலீ
யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு காலத்தில் இலங்கையின் ஏராளமான புத்திஜீவிகளையும், தலைசிறந்த அரசியல்வாதிகளையும் கொண்டிருந்தது. இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் தமது சுயமுயற்சியில் தலைநிமிர்ந்து வாழலாம் என்பதற்கான நல்லுதாரணமாக யாழ்ப்பாணத்தின் படித்த சமூகம் ஒரு காலத்தில் எடுத்துக் காட்டப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய பெரும்பாலான அரசியல் வாதிகளும், தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்த்த புத்திஜீவிகளில் பெரும்பாலானவர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனாலும் 1978ம் ஆண்டு தொடக்கம் அவ்வாறான அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் அச்சுறுத்தலான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததன் காரணமாகவே தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும்இ நிர்க்கதியான அரசியல் நிலைமைக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண மக்கள் அண்மைக்காலமாக இழந்த அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதன் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயர் பொன் சிவபாலன் என்றால் அது மிகையல்ல. அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அச்சுறுத்தலான சூழ்நிலை நிலவத் தொடங்கிய 1983ம் ஆண்டு தொடக்கம் தமிழ் அரசியற் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுத் தப்பியோட வேண்டிய அளவுக்கு உயிரச்சுறுத்தலான சூழ்நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான காலகட்டத்திலும் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாது அரசியலில் மிகவும் துடிப்பாக ஈடுபட்ட ஒரு சிலரில் மறைந்த திரு. பொன் சிவபாலன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவரது குடும்ப அங்கத்தவர்களிலும் பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். வசதியாக வாழலாம் என்ற ஆசையைக் காட்டி அவரையும் வெளிநாட்டுக்கு அழைத்துக் கொள்வதற்கு அவர்கள் பகீரதப் பிரயத்தனப்பட்டனர். ஆனாலும் தான் பிறந்த மண்ணுக்கும், அங்குள்ள மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற தணியாத தாகம் காரணமாக, மக்கள் சேவையைப் புனிதமாக அவர் கருதியதன் விளைவாக வெளிநாடு சென்று தான் மட்டும் வசதியாக வாழும் எண்ணம் அவருக்கு கடைசி வரையிலும் வரவேயில்லை. அவ்வாறான ஆலோசனைகள், அழைப்புகள் அனைத்தையும் அவர் அடியோடு நிராகரித்தார். அவ்வாறான அவரது அரசியல் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் காரணமாகவே தான் நேசித்த யாழ்ப்பாண மக்களின் அரசியல் பிரதிநிதியாக, அந்த மக்களின் மேயராகப் பணியாற்றும் பெரும் பாக்கியம் அவரைத் தேடி வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மிக முக்கியமான காலகட்டமொன்றில்தான் அவர் யாழ்ப்பாண மேயராகப் பதவியேற்றார். ஆனாலும் யாழ்ப்பாண மக்களின் துரதிருஷ்டம் மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே தான் நேசித்த, தன்னை நேசித்த மக்களையும், மண்ணையும் விட்டு அவரைப் பிரித்து விட்டது.
யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பிரதேசத்தில் சித்தங்கேணியில் பிறந்த பொன் சிவபாலன், வட்டுக்கோட்டை விக்டோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவராவார்.தனது இளம் வயது தொடக்கம் தமிழ், இலக்கியம், கவிதைத்துறை, மற்றும் பெர்துமேடைகளில் பேசுதல் போன்ற விடயங்களில் பொன் சிவபாலன் அவர்களுக்கு அலாதியான விருப்பமும், திறமையும் இருந்தது. சட்டக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியிலும் அதன் தமிழ் இலக்கிய மன்றத்தில் பணியாற்றியதோடு, பல விவாதப் போட்டிகளிலும் பங்கெடுத்து தனது திறமையை வெளிக்காட்டினார். 1980ம் ஆண்டு சட்டக்கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து சட்டத்தரணியாக வெளியாகிய அவர், யாழ்ப்பாணத்தில் தனது சட்டத் தொழிலை மேற்கொண்டார். அக்காலத்தில் சட்டத்தரணிகளாக வெளியான பலரும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் சட்டத்தரணியாக தொழிற்படுவதன் மூலம் பெரும் பணத்தை உழைத்துக் கொள்வதில் குறியாக இருக்க, பொன் சிவபாலனோ தனது மண்ணில் வாழும் மக்களுக்கு தன்னால் இயன்ற மட்டிலும் சேவையாற்றும் நோக்குடன் யாழ்ப்பாணத்திலேயே சட்டத்தரணியாக தொழிற்பட்டார். அதிலும் குற்றவியல் வழக்கறிஞர் என்றால அன்று மட்டுமல்ல இன்றும் கூட குறுகிய காலத்துக்குள்ளாகவே பெரும் வருமானமீட்டிக் கொள்ள முடியும் என்பது பகிரங்கமாகத் தெரிந்த விடயமாகும். குற்றவியல் வழக்கறிஞராக இருந்த போதும் தான் எடுத்துக் கொண்ட விடயங்களில் கருத்துணர்வு, நாணயம் பேணல், கருணையுள்ளம், சேவை மனப்பாங்கு என்பன காரணமாக பொன் சிவபாலன் குறுகிய காலத்துக்குள்ளாகவே புகழ் பெறத் தொடங்கினார். மக்கள் மத்தியில் அனைவராலும் மதிக்கப்பட்டார்.
1983ம் ஆண்டிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய அசாதாரணமாக சூழல் காரணமாக அப்பிரதேசத்தின் ஏனைய மக்களைப் போலவே பொன் சிவபாலனும் இடம்பெயர்வு அவலங்களை எதிர்கொண்டார். அதன் காரணமாக அவரது தொழிலும் வருமானமும் பாதிக்கப்பட்டு தீவிரமான பொருளாதார நெருக்கடிகளால் பெரும் அல்லலுற்றார். அக்காலகட்டத்தில் கொழும்பு வீட்டுச் சொந்தக்காரர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து வருவோருக்கு வாடகைக்கு வீடுகளை வழங்கப் பின்னடித்த காலகட்டமாக இருந்தது. அவ்வாறான சூழ்நிலையில் போதுமான வருமானமின்றிய காரணத்தால் அடிக்கடி இடம் மாறி பல வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய அவலத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
ஒரு கட்டத்தில் தொடர்ந்தும் கொழும்பில் வசிக்கப் பிடிக்காதவராக அவர் திருகோணமலைக்கு இடம்பெயர்ந்தார். அங்கு இருந்தபடி தனது சட்டத்தொழிலை மீண்டும் மேற்கொள்வது அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. இவ்வாறாக எத்துணை துன்பங்கள், அல்லல்களுக்கு மத்தியிலும் அவர் தான் சார்ந்திருந்த கட்சி மூலமான தனது அரசியற் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதில் பின்னிற்கவில்லை. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணத்தில் தொய்வேற்படவில்லை. அரசியல் வழிமுறை குறித்த அவரது நம்பிக்கை, எதிர்பார்ப்பு, விசுவாசம் என்பன அத்துணை துன்பங்களின் மத்தியிலும் தளராதிருந்தது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளை நிரந்தரமாகத் தணிப்பதாயின், சமாதானக் காற்றை சுவாசிப்பதாயின் அரசியல் தீர்வொன்றின் ஊடாக மட்டுமே அது முடியும் என்று அவர் நம்பினார். அதற்கான பற்றுறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றினார்.
பொன் சிவபாலன் தனது அரசியல் ஆசானாக மகத்தான மக்கள் தலைவன் மறைந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதன் காரணமாக சமஷ்டிக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பொன் சிவபாலன், அமிர்தலிங்கத்தின் அரசியற் பணிகளில் நெருக்கமாகச் செயற்பட்டதுடன், திரு. அமிர்தலிங்கத்துக்காக அவர் பிரதிநிதித்துவப்படுத்திய, தான் பிறந்த வட்டுக்கோட்டைத் தொகுதியில் அயராத அரசியற் பணிகளில் ஈடுபட்டார். (சமஷ்டிக் கட்சிதான் பிற்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாற்றம் பெற்றது.) அவ்வாறாக அமிர்தலிங்கத்தின் அரசியற் கொள்கைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்த பொன் சிவபாலன், அமிர்தலிங்கம் அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான பின்னர் அமிர்தலிங்கம் ஞாபகார்த்தக் குழுவின் தவிசாளராகவும் செயற்பட்டிருந்தார். தான் நேசித்த பெருந்தலைவரின் பேர் என்றும் நினைவு கூரப்பட வேண்டும் என்பதற்காக சட்டக்கல்லுரியில் சிறந்த விவாத ஆற்றலுக்கு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஞாபகார்த்தமாக ஒரு தங்கப் பதக்கத்தை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்தார்.
இவ்வாறான அர்ப்பணிப்பான செயற்பாடுகளைப் பாராட்டும் வண்ணமாக அவர் சார்ந்திருந்த கட்சியின் சட்டச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கட்சி விடயங்களில் காட்டிய அர்ப்பணிப்பு காரணமாக தனது சட்டத்தொழிலின் மூலமாகக் கிடைத்த வருமானத்தையும் தியாகம் செய்தவர். கட்சியின் எண்ணற்ற அலுவல்களை திறமையாக மேற்கொண்டு வந்த அதே நேரம், எவ்வளவு வேலைப்பளுவிற்கு மத்தியிலும் சமகாலச் சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளில் கலந்து கொள்ள அவர் ஒருபோதும் தவறியதேயில்லை.
அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அபிவிருத்திகளிலும் அவர் ஆர்வம் காட்டினார். ஜனநாயக விழுமியங்கள்இ மனித உரிமைகள் குறித்து அவருக்குள் ஆழமான அர்ப்பணிப்புணர்வு காணப்பட்டது.கட்சியினால் ஒப்படைக்கப்படும் எந்தப் பொறுப்புகளையும், அதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிந்திருந்தாலும் எதுவித தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டார். கட்சியின் அரசியல் விசுவாசத்தின் அடிப்படை அம்சங்கள் அவை என்பதாகவே அவர் கருதினார்.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் பொன் சிவபாலன் தவறாது ஆர்வத்துடன் கலந்து கொண்டார். அவரது கருத்துணர்வு, தீவிர அரசியல் அர்ப்பணிப்பு, தமிழ் மக்களின் உரிமைகளை ஜனநாயக வழிமுறையினூடாகப் பெற்றெடுப்பதில் சளைக்காத ஆர்வம் என்பன கண்டு ஜனாதிபதி பிரேமதாச கூட ஒரு தடவை பொன் சிவபாலனை மனம் விட்டுப் பாராட்டினாராம். சர்வ கட்சி மகாநாட்டில் மாத்திரமன்றி ஏனைய கட்சிகளோடு இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏராளமான கலந்துரையாடல்களிலும் அவரது பங்களிப்பை நல்கியிருந்தார். இவ்வாறாக தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொள்வதற்காக தன்னாலான வரையில் அயராது உழைத்தார்.
லண்டனில் இருக்கும் சிறுபான்மையோர் உரிமைகள் குழு விரைவிலேயே சிவபாலனின் திறமைகள், மற்றும் சமத்துவத்துக்கான அர்ப்பணிப்பு என்பவற்றை இனம் கண்டது. அதன் காரணமாக அக்குழுவின் தலைவர் அலன் பிலிப்பிடமிருந்து ஜெனீவாவில் இடம்பெற்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பான மகாநாடொன்றில் கலந்து கொள்ளுமாறு சிவபாலனுக்கு அழைப்புக் கிடைத்தது. குறித்த மகாநாடு 1996ம் ஆண்டளவில் நடைபெற்றதாக நம்புகின்றேன். ஆர்வத்தோடும், கருத்துணர்வுடனும் அதில் பங்கெடுத்துக் கொண்ட பொன் சிவபாலன், குறித்த மகாநாட்டின் மூலமாக சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நியமங்களையும், உலகெங்கும் உள்ள சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசாலமான தெளிவைப் பெற்றுக்கொண்டார்.
மகாநாட்டில் பங்கெடுத்த நாட்களில் தான் சந்தித்த மத்திய ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடன் நேசமிகு கலந்துரையாடல்கள் மூலமாக அவர்களின் மதிப்புக்கும் நட்புணர்வுக்கும் பாத்திரமானார்.
பொன் சிவபாலனின் ஐரோப்பா விஜயங்களின் போது அங்குள்ள நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வதிவிட அனுமதிக்காக தன்னாலான உதவிகளைச் செய்து கொடுத்தார். அறிந்தவர் அறியாதவர் என்று அவர் அன்று செய்த உதவிகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நம்மவர் பலர் வதிவிட உரிமை பெற்று இன்றும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கொள்கைக்காக தனது வருமானத்தையே உதறித்தள்ளி விட்டு, பொருளாதார நெருக்கடிகளில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தமை, இலங்கையில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி என்பன காரணமாக பொன் சிவபாலனில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர்கள் பலர், அவரது ஐரோப்பிய விஜயங்களின் போது அவரை அங்கேயே தங்கி விட வற்புறுத்திய போதும் அவர் மசியவில்லை. கொண்ட கொள்கைக்காகவும், தான் பிறந்த மண்ணில் அல்லல்படும் மக்களுக்காகவும், சேவையாற்றும் தனது இலட்சியத்தை விட்டு, மரணத்துக்கு அஞ்சி ஓடியொளிக்க அவர் ஒருபோதும் விரும்பவில்லை.
அதற்கு மேலதிகமாக சர்வதேச ரிதியாக நடைபெற்ற மனித உரிமைகள் மகாநாடுகளில் கலந்து கொண்டு, இலங்கையில் நடைபெறும் ஆயுதக் கலாசாரம் மூலமான மனித உரிமைகள் தொடர்பிலும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதில் பாரிய பங்காற்றியிருந்தார்.அதற்கு மேலதிகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் விடயத்தில் அந்தந்த நாடுகள் அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வந்தவர்.
அதன் காரணமாகவே வடக்கில் முக்கியப் பொறுப்புகளிலிருந்தவர்கள் ஆயுததாரிகளால் தொடர்ந்தும் வரிசையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்இ பதவிகளைப் பொறுப்பெடுத்து மக்களுக்குச் சேவையாற்ற யாருமே முன்வராத அச்சுறுத்தலான சூழ்நிலையின் மத்தியிலும் யாழ். மேயர் பதவியைப் பொறுப்பெடுத்து துணிச்சலுடன் மக்களுக்குச் சேவையாற்றினார். தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்திருந்த போதும் அவர் தான் எடுத்த காரியத்தில் ஒரு போதும் பின்னிற்கவில்லை. அதே போல ஆயுததாரிகளால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று தெரிந்திருந்த போதிலும்இ அந்த ஆயுததாரிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ ஏதாவது தேவையின் நிமித்தம் தன்னை நாடி வந்த போதெல்லாம் மறுக்காது அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முயற்சி செய்தார்.
தனிப்பட்ட ரிதியில் பொன் சிவபாலன் பழகுவற்கு மிகவும் இனிமையான மனிதர். பரிவும் கருணை உள்ளமும் கொண்டவர். கலாநிதி நீலன் திருச்செல்வம் போலவே அரசியலிலும், சட்டத்துறையிலும் ஆர்வம் கொண்டிருந்த பொன் சிவபாலன், அவரைப் போலவே ஆங்கிலத்திலும் சிறந்த புலமையைக் கொண்டிருந்தார். நல்ல ஆளுமையும், மனித நேயமும் கொண்டிருந்த அவரிடம் ஒருபோதும் தீய நோக்கம், பொறாமை மற்றும் வஞ்சக குணங்கள் காணப்படவில்லை. விசுவாசமும், நேர்மையும் கொண்ட எளிமையான மானிட நேயன் அவர். தன் குடும்பத்தினர் மீது அளவற்ற பாசமும், தமிழ் மக்கள் மீது எண்ணற்ற நேசமும் கொண்டிருந்தவர். உண்மையாகவே மக்களை நேசித்த, யதார்த்தமானதும் ஆழமானதுமான அரசியல் பார்வை மட்டுமன்றி, நடைமுறைச் செயற்பாட்டாளராகவும் மக்கள் மத்தியில் வாழ்ந்து காட்டியவர். அதன் காரணமாக இன்றளவும் இங்குள்ள மக்களால் மட்டுமன்றி புலம் பெயர்ந்து வாழும் மக்களாலும் இடைவிடாது நினைவு கூரப்படுகின்றவர்.அரசியல் வாதிகள் பலரிடம் காண முடியாத விலைபோகாத பண்பு பொன் சிவபாலனிடம் நிறையவே காணப்பட்டது. நேர்மைக்கும் மேலான நெஞ்சுரம் காணப்பட்டது.
1995ம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்தன் பின்வந்த காலப்பகுதியில் அங்கு உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்தியிருந்தது. அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாண மாநகர சபையின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றி, திருமதி சரோஜினி யோகேஸ்வரனை மாநகர மேயராக நியமித்தது. ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைகளை அரசியல் ரிதியாகப் பெற்றுக் கொள்வதில் நாட்டமில்லாத ஒரு சிலரால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலாகவும் அது கொள்ளப்பட்டது. அதன் காரணமாக திருமதி சரோஜினியின் மறைவை அடுத்து யாழ். மாநகர மேயர் பதவியைப் பொறுப்பெடுப்பதற்கு எவரும் முன்வராத நிலைமையொன்று காணப்பட்டது. அவ்வாறான அச்சுறுத்தலான சூழ்நிலையின் மத்தியிலும் பொன் சிவபாலன் துணிச்சலுடன் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களைப் போக்க வேண்டும் என்ற ஆர்வம், அதற்கான துடிப்பு அவரிடம் காணப்பட்டது. 1998ம் ஆண்டின் ஜுன் மாதம் 29ம் திகதி பொன் சிவபாலன் யாழ். மாநகர மேயராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவருக்கான பதவிப் பிரமாணத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய பிரதித் தலைவர் ஆனந்த சங்கரி செய்து வைத்திருந்தார். அழிந்து போயிருந்த யாழ்ப்பாண மாநகரை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஏனைய மாநகரங்களின் முதல்வர்கள், அமைச்சர்மார், ஜனாதிபதி, மற்றும் பிரித்தானியத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்தித்து நிலைமைகளை எடுத்து விளக்கினார். யாழ் மாநகரின் பாதைகளைச் செப்பனிடும் நடவடிக்கைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கையிலேயே, 1998ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 11ம் திகதி அவரை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு மானிடநேய மிக்க அரசியல்வாதியின் மரணமும் மக்கள் நலன் தொடர்பான நடவடிக்கையொன்றின் போதே நிகழ்ந்தது. அந்த வகையில் பொன் சிவபாலன் தனது கடைசி மூச்சு வரை மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர். மிதவாத அரசியலில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த பொன் சிவபாலன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்து தனது சேவைகளைத் தொடர்ந்திருப்பாராக இருந்தால், யாழ்ப்பாணத்தில் முற்று முழுதாக ஜனநாயக சூழல் கட்டியெழுப்பப்படுவதற்கான சூழ்நிலைமை படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டிருக்கும்.
அவரது மறைவு குறித்து அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் விடுத்திருந்த அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டிருந்தது போன்று, மக்களுக்காக வாழ்ந்த அரசியல்வாதிகளின் இத்தயை உயிரிழப்புகளால் யாருக்கும் நன்மை கிட்டப் போவதில்லை. சகோதரப் படுகொலைகள் காரணமாக தமிழ் சமூகம் இழந்தது போதும். வன்செயல்கள் மூலமாக எதையும் சாதிக்க முடியாது என்பதை இனியாவது உணர்வோம். அதன் மூலமாக எம்மைப் பிடித்தாட்டும் அவலங்களையும், அராஜகங்களையும் தோல்வியுறச் செய்வதற்கு அணிதிரள்வோம்.
‘‘அபூநுஹா” – ஆர். எப். அஷ்ரப் அலீ (செப்ரம்பர் 11 2008)
roshan
சிவபாலனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்களுக்காக சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகள் அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார்கள். கடைசியில் புலிகளும் அழிந்து விட்டார்கள்.
சிவபாலன் மட்டுமல்ல… மனிதநேயம் கொண்ட அனைவருக்கும் வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது சகஜம் தான் போலுள்ளது. நேர்மை நியாயம் என்பவற்றை முற்றாக மனதிலிருந்து விட்டொழித்தால் மாத்திரமே இனி தலைநிமிர்ந்து வாழ முடியும் போலுள்ளது.
சிவபாலன் பற்றிய நினைவுக்கட்டுரை எழுதிய அஷ்ரப் அலீ தற்போது பெரும் உயிரச்சுறுத்தலை எதிர் கொண்ட நிலையில் நாட்டை விட்டே வெளியேறியிருப்பதாக கேள்விப்பட்டேன். தமிழ் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் மற்றும் ஏனைய சில அநீதிகள் தொடர்பாக வெளியாட்களுடன் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்ட காரணத்தால் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு தற்போது அவரைத் தேடி வருகின்றதாக தகவல் அறிந்தேன். அத்துடன் கொழும்பில் பாதாள உலகக்குழுவினரினதும் கொலை அச்சுறுத்தல் அவருக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி. எது எப்படியோ ஒன்றில் நாளை அவர் அரசாங்கத்துக்கு எதிரான பல தகவல்களை வெளிக்கொண்டு வருவதில் தமிழ் மக்களுக்கு நல்லதோர் பங்களிப்பை நல்கக் கூடியவராக இருப்பார். அல்லது அரச படைகளின் பங்களிப்புடன் படுகொலை செய்யப்பட்டிருப்பார்.அப்படி நடந்தால் அனுதாபக் கட்டுரையொன்றை தேசம் நெற் ஆயினும் வெளியிடுமோ தெரியாது. ஏனெனில் மனிதாபிமானம் உள்ள அனைவரையும் மறந்து விடுவது தான் நமது பண்பாயிற்றே.
தங்க. முகுந்தன்
நேரமின்மை காரணமாக என்னால் எதுவும் கிருத்தியத்தில் எழுத முடியவில்லை. கடந்த வருடம் அவருடனான நிகழ்வுகளைப் பதிவிட்டிருந்தேன். இம்முறை அவரது படங்களை இணைத்துள்ளேன். http://www.kiruththiyam.blogspot.com
palli
நண்பர் சிவபாலனின் நினைவுகள் பலர்போல் பல்லியின் மனதிலும் மறக்க முடியாது; அவர் ஒரு அரசியல் வாதியல்ல, சமூகவாதி; அவரது நினைவுகளை மறக்காமல் வருடாவருடம் கொண்டுவரும் தேசம் நெற்றுக்கு பல்லியின் பார்ரட்டும்
வாழ்த்துக்களும் , நன்றி,
நட்புடன் பல்லி,
ssganendran
ஆண்டுகள் எத்தனை புரன்டோடிப்போனாலும் அண்ணன் சிவபாலனின் நினைவுகள் இறக்கும்வரை என் இதயத்தில் இருந்த்துகொண்டே இருக்கும்
pandithar
அன்பர் சிவபாலன் அவர்களுக்கு நான் மரியாதை செலுத்துகின்றேன்.
சிவபாலனை அழித்தவர்கள் அவனை விடவும் பெரிதாக எதை பெற்றுத்தந்தார்கள்?…..
accu
என் இனிய நண்பன் சிவபாலனின் நினைவுநாளில் கனத்த நெஞ்சத்துடன் அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவரை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள் என்ற மமதையும் கொள்கிறேன்.
நான் முன்னர் பதிவிலிட்ட சிவபாலனின் நினைவுக்குறிப்பை மீண்டும் பதிவேற்றியதற்க்கு தேசம் ஆசிரியர் ஜெயபாலனுக்கு என் நன்றிகள். அக்கு.
பார்த்திபன்
சுயநலப்புலிகள் என்றும் மக்களை நேசித்ததுமில்லை, மக்களை நேசித்தவர்களை விட்டு வைத்தததுமில்லை. உண்மையில் சிவபாலன் போன்றவர்கள் தான் உண்மையான தேசப்பற்றாளர்கள்.