கிழக்கு மாகாண இளைஞர்களுக்கும் இத்தாலியில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள இத்தாலிய தூதுவரை தூதரகத்தில் சந்தித்துப் பேசிய பிரதியமைச்சர் முரளிதரன் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் பேச்சு நடத்தினார்.
இலங்கையில் தற்போது சமாதான சூழல் நிலவுவதையடுத்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு செல்லலாம் என இத்தாலி அரசு தனது பிரஜைகளு க்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதியமைச்சர் முரளிதரனின் சந்திப்பு அமைந்திருந்தது.
வருடாந்தம் இத்தாலி அரசு இலங்கைக்கு வழங்கும் 3000 வேலைவாய்ப்புக் கான கோட்டாவை 2011ம் ஆண்டு சற்று அதிகரித்து தருவதாகவும் இதில் கிழக்கு மாகாணத்துக்கு கூடுதல் முன்னுரிமை வழங்குவதாகவும் இத்தாலிய தூதுவர் ரூபன்ஸ் அனா ஸடேல் பிரதி யமைச்சர் முரளிதரனிடம் உறுதியளித்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் வேலையற்ற இளைஞர், யுவதிகள் பெருந்தொகையானோர் இருப்பதாக குறிப்பிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களுக்காகவே இத்தாலி தூதுவரிடம் இந்த வேண்டுகோளைச் செய்ததாக குறிப்பிட்டார்.
அத்துடன் வெளிநாட்டு அமைச்சின் ஒப்புதலுடன் இத்தாலி பெரகுவா , சேரு பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களுக்கு கற்பதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் 2011 பெப்ரவரி மாதம் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவுள் ளதாகவும் இத்தாலிய தூதுவர் பிரதியமைச்சரிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.