ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு எதிர்வரும் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளதுடன், மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் இம்முறை மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 65வது பொதுச் சபை அமர்வுகள் எதிர்வரும் 14ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து 20ம் திகதி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் செப்டெம்பர் 23ம் திகதி ஆரம்பமாகும்.
இம்முறை உச்சி மாநாட்டில் மில்லேனிய அபிவிருத்தி இலக்குகள், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு மற்றும் வலுப் படுத்தல், பாதுகாப்பு சபை மறுசீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.