மலையகத் தோட்டப் புறங்களில் உள்ள ‘லயன்’ குடியிருப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்து தனித்தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் வீடுகளைக் கொண்ட கிராமத்தைத் தனியாகவும் தொழில்புரியும் தோட்டத்தைத் தனியாகவும் அடையாளப்படுத்துவதற்கு திட்டமிட்டுச் செயற்படுத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார். தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக இந்தியா ஆறாயிரம் வீடுகளை நிர்மாணித்து வழங்கவுள்ளது. இதில் முதன் முதலாக ஊவா மற்றும் மத்திய மாகாண தோட்டங்களில் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்று பிரதியமைச்சர் சிவலிங்கம் குறிப்பிட்டார்.
தற்பொழுது தொழிலாளர் குடியிருப்புகளும் தோட்டமும் ஒன்றாகவே உள்ளன. இதனால், அவர்களின் வாழ்விடமும் தோட்டம் என்றே அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அந்த நிலையை மாற்றி வாழ்விடம் அமையும் கிராமத்தை வேறாகவும் தேயிலை, இறப்பர் தோட்டங்களை வேறாகவும் அழைக்கும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
‘நான் இந்தத் தோட்டத்தில் வாழ்கிறேன் என்பதை இல்லாமற் செய்து நான் இந்தக் கிராமத்திலிருந்து அந்தத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லும் நிலையை உருவாக்குவோம்’ என்று கூறிய அமைச்சர் தோட்டங்கள் ஆங்கிலப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும் 90% தமிழ்ப் பெயர்கள் உண்டென்றும் அந்தத் தமிழ்ப் பெயர்களில் தொழிலாளர்களின் கிராமங்கள் அழைக்கப்படுமென்றும் விளக்கினார்.
வாழமலை, சமுத்திரவள்ளி, சமரவள்ளி, தெய்வானை, மண்வெட்டி, லெட்சுமி, கல்மதுரை, பூப்பனை என்று பல்வேறு தமிழ்ப் பெயர்களில் தோட்டங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தத் தமிழ்ப் பெயர்களைக் கிராமங்களுக்குச் சூட்டுவதோடு தோட்டங்களை ஆங்கிலப் பெயரில் அழைக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம் உதாரணமாக கல்மதுரை கிராமத்திலிருந்து ஸ்ரோனிகிளிப் தோட்டத்திற்குத் தொழிலுக்குச் செல்கிறேன் என்ற நிலையைத் தோற்றுவிப்போம் என்று மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் முழுமையான ஒத்துழைப்புடன் மலையகத் தோட்டப் புற மக்களின் வாழக்கை முறையை முற்றாக மாற்றியமைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்குமென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.