ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் தான் உட்பட 25 ஐ. தே. க. எம்.பிக்களும் பாராளுமன்றத்தினுள் தனித்து செயற்படப் போவதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார். இதற்கென ஐ. தே. கட்சித் தலைமைக்கு ஒரு வாரம் காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னடைந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை பலம் வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியாக கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்றும் இதற்கென கட்சி உறுப்பினர்கள் அணி திரண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனது முயற்சி எமது கட்சியை கட்டியெழுப்புவதே தவிர ஆளும் தரப்பில் சென்று அமர்வதல்ல எனவும் கூறினார். உங்களுடன் இவ்வாறு இணைந்து கொண்டுள்ள ஐ. தே. க. உறுப்பினர்கள் யார் யார் என கூற முடியுமா? என கேட்டபோது.இல்லை எவருடைய பெயரையும் கூறமுடியாது. எனினும், நாம் எமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றத்தில் ஒருமித்து செயற்படுவோம். தனியாக எமது குழு அமரும் என்றும் குறிப்பிட்டார்.