லண்டனில் தமிழ் விளையாட்டுக் கழகங்கள் லாபத்துடன் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் மிகவும் வெறிறிகரமாகச் செயற்பட்ட பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் (British Tamils Spoerts League – BTSL) தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அக்கழகத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்கள் தெரிவிக்கின்றன. பந்துகள் வாங்குவதும் நடுவருக்கு கட்டணம் செலுத்துவதுமே பிரச்சினையானதாக மாறியுள்ளது எனவும் தெரியவருகின்றது.
பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனை பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடைய விளையாட்டுக்குழுவின் சந்திப்பின் பின்னதாக எமது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலம்சென்ற போராளி கேணல் கிட்டுவின் பெரிய படத்துடன் இருந்த அந்தச் சந்திப்பு அறையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. தேசம்நெற் சார்பில் நானும் நண்பர் த சோதிலிங்கமும் தமிழர் விளையாட்டுக் கழகம் சார்பில் அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணன் வணங்கா மண் கப்பலில் பயணம் செய்த ஊடகவியலாளர் உதயணன் மற்றும் இரு உறுப்பினர்களும் இருந்தனர். பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் வசந்தன் கிருஸ்ணனின் கருத்துக்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படுகிறது.
எமது கேள்விகள் பெரும்பாலும் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதன் அதன் நிதி நிர்வாகம், பிரித்ததானிய விளையாட்டுக் கழகத்தின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது.
இவற்றுக்குப் பதிலளித்த வசந்தன் கிருஸ்ணன் விளையாட்டுக் கழகம் சிறிய அளவில் நிதிநெருக்கடியை சந்தித்து உள்ளதாகவும் ஆனால் அது தங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்களால் பெரிதுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
‘பந்துகள் வாங்குவதற்கு பணம் வழங்கப்படுவதில்லை என்பதெல்லாம் உண்மையல்ல’ எனக் குறிப்பிட்ட அவர் ‘கிரிக்கட் விளையாட்டுக்கள் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெறுவதால் வாங்கிய பந்துகளை குறித்த நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை’ எனத் தெரிவித்தார். இதற்கான மாற்று வழியாக விளையாட்டுக் கழகங்களே பந்துகளை வாங்கவும் நடுவருக்கான பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். ‘அதற்கான செலவை தாங்கள் அவர்களுடைய கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்வோம்’ எனவும் வசந்தன் சுட்டிக்காட்டினார்.
‘விளையாட்டுக் கழகம் கிரிக்கட் போட்டிகளை ஆரம்பித்த காலங்களில் மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலித்தது’ என்றும் அதனால் ஆரம்ப வருடங்களில் ஏற்பட்ட நட்டமே இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார்.
தமிழர் விளையாட்டுக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 10 வருடங்களுக்கு மேலாக யாழ் இந்தக்கல்லூரிப் பழைய மாணவர் எஸ் ஸ்கந்தமூர்த்தி என்பவர் கிரிகட் போட்டிகளை ஆண்டு தோறும் நடாத்தி வந்தார். இவருடைய லீக்கில் இருந்த விளையாட்டுக் கழகங்களைக் கவருவதற்காகவே பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மிகக் குறைந்த கட்டணத்தை அறவிட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால் அதுவே இப்போதைய நெருக்கடிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது என வசந்தன் கிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.
‘ஸ்கந்தமூர்த்தி உருவாக்கிய விளையாட்டுக் கழகத்தில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள் அதிருப்தியடைந்து வெளியேறியவர்கள். அவர்கள் தாயகப் பற்றுடையவர்கள்’ எனக் கூறும் வசந்தன் கிருஸ்ணன் ‘இறுதியில் வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள் வேறு வழியின்றியே தங்களுடன் இணைந்தனர்’ எனக் கூறினார். ‘பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் பெரும்பாலான கழகங்கள் இணைந்த நிலையில் ஸ்கந்தமூர்த்தியினால் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாது போனமையினால் ஏனைய கழகங்கள் விரும்பமின்றி விளையாட்டுப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே வந்து இணைந்தனர்’ என்றும் வசந்தன் கிருஸ்ணன் விபரித்தார். இவ்வாறான விளையாட்டுக் கழகங்களே தற்போது சிறிய விவகாரங்களையும் பெரிதுபடுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பிரித்தானிய விளையாட்டுக் கழகம் தனது கணக்கு விபரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை எனக் கேட்கப்பட்ட போது, ‘கழகங்கள் விரும்பும்பட்சத்தில் அதனைப் பார்வையிட முடியும்’ எனத் தெரிவித்தார் வசந்தன் கிருஸ்ணன். ‘அண்மையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதில் கணக்கு விபரங்களை வெளியிட்டோம். ஆனால் பல கழகங்கள் அதில் சமூகமளிக்கவில்லை’ எனவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். உங்கள் விளையாட்டுக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உறுப்புரிமைக் கட்டணம் செலுத்தியே உறுப்பினராக உள்ளனர். ஆகவே நீங்கள் கணக்கு விபரத்தை அவர்களுக்கு மின் அஞ்சலூடாக அனுப்ப முடியும் அல்லது உங்கள் இணையத்திலேயே பிரசுரிக்க முடியுமே எனக் கேட்ட போதும் ‘நாங்கள் கணக்கு வழக்கை காட்டத தயாராக உள்ளோம். விரும்பியவர்கள் எங்களை அணுகலாம்’ எனப் பதில் தரப்பட்டது.
தங்களுக்கு உள்ள நிதிநெருக்கடிகளை தாங்கள் ஓரளவு சமாளித்து வருவதுடன் கழகங்களிடம் பெற்ற கடன்களையும் மீளச் செலுத்தி வருவதாக வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். இன்னும் சில ஆயிரம் பவுண்களே கடன்கள் இருப்பதாகத் தெரிவித்த வசந்தன் கிருஸ்ணன் இன்றுள்ள அரசியல் சூழலால் பல்வேறு தரப்பினரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் ஒரு கண் வைத்துள்ளதாகவும் இதனால், தான் உள்முரண்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானதாகவும் கூறினார்.
எவ்வாறான நெருக்கடிகள் சிக்கல்கள் தோண்றிய போதும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தை உறுதியுடன் தொடரும் என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மேவி வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் எமக்கு விடைதந்தார்.
._._._._._.
லண்டன் குரலில் வெளியான செய்தி:
100,000 பவுண் நிதிப்புரள்வு – 45,000 பவுண் லாபம் ஈட்டக் கூடிய அமைப்பு! 5 வருடங்களாக கணக்கு வழக்கு இல்லை! பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் !
பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தின் எதிர் காலம் கேள்விக் குறியாகி உள்ளது. ஆண்டுக்கு 50 000 பவுண்களை வரை லாபமீட்டக் கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் கணக்கு வழக்குகளில் நட்டம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
துடுப்பாட்ட விளையாட்டுக்கான பந்துகள் வழங்கப்படவில்லை, நடுவர்களுக்கு திகதியிடப்படாமல் வழங்கப்பட்ட காசோலைகள் திரும்புகின்றன, சில போட்டிகளுக்கு மைதானமே ஏற்பாடு செய்யப்படவில்லை. சில இடங்களில் பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்திற்கு மைதானங்களை வழங்க உரிமை நிறுவனங்கள் மறுக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் தாயகத்தில் இருந்து வந்த வசந்தன் கிருஸ்ணன் என்பவர் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் மட்டுமே பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தின் அறியப்பட்ட பொறுப்புடைய ஒருவராக உள்ளார். இவரைத்தவிர அந்த அமைப்பில் வேறு எவரையும் 1200 விளையாட்டு வீரர்களும் 60 விளையாட்டு கழகங்களும் அறிந்திருக்கவில்லை.
ஆனால் இந்த வசந்தன் என்ற பொறுப்பாளரின் பின்னால் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிதி சேகரிப்பு விடயங்களுடனும் தொடர்புடைய தனம் என்பவர் இயங்குவதாக லண்டன்குரலுக்குத் தெரியவருகிறது.
100 000 பவுண் நிதி வருமானத்தையும் 45 000 செலவு தவிர்ந்த லாபத்தையும் பெறக்கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டக் கழகம் நட்டத்தில் உள்ளதாகக் கூறி விளையாட்டுக் கழகங்களின் பல்லாயிரக் கணக்கான பணத்தை காணாமலாக்கி உள்ளது.
1200க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆண்டுக்கு 100 000 பவுண்கள் வரை நிதியைப் பெற்றுக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் (British Tamil Sports League) தற்போது நிதிப் பிரச்சினையில் சிக்கி உள்ளது. தங்களுடைய பொறுப்பு ”to develop such a sports organization and leagues set-up where sports and sportsmanship is truly developed and sustained at the same time”, என்று தங்கள் இணையத்தில் தெரிவித்துள்ள அமைப்பின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
அண்மைக் காலமாக பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தன்னுடைய உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் இருந்தும் கடமையில் இருந்தும் தவறியுள்ளது. விளையாட்டு வீரர்களிடம் இருந்தும் விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் குறித்த காலத்தில் நிதியை வசூலித்த பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியுள்ளது.
வாரம் தோறும் விளையாட்டுக் குழுக்களிடையே நடைபெறும் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் பல தவறுகள் விடப்பட்டு உள்ளது. கிரிக்கட் விளையாட்டில் தேவையான பந்துகள் வழங்கப்படவில்லை. நடுவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணம் வழங்கப்படாததால் நடுவர்கள் கடமைக்கு வரத் தவறியுள்ளனர். சில போட்டிகளுக்கு மைதானமே பதிவு செய்யப்படாத சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு வீரர்கள் வெறுப்படைந்து போயுள்ளனர்.
பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தில் 40 துடுப்பாட்ட கழகங்களும் 20 உதைபந்தாட்டக் கழகங்களுமாக 60 விளையாட்டுக் கழகங்கள் 1200 விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு பின்வரும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.
விளையாட்டு வீரரின் உறுப்புரிமைக் கட்டணம் 10.00 பவுண்
விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக் கட்டணம் 605.00 பவுண்
Twenty – 20 துடுப்பாட்ட போட்டிகளுக்கான நுழைவுக்கட்டனம் 170.00 பவுண்
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான அம்பயருக்கான கட்டணம் 360.00 பவுண் (ஒரு போட்டிக்கு ஒரு கழகம் 20 பவுண் செலுத்த வேண்டும் 18 போட்டிகளுக்கு)
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான 18 பந்துகளுக்கான கட்டணம் 180.00 பவுண் (ஒரு பந்து 10.00 பவுண்)
இவ்வாறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு இவற்றுடன் மைதானங்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டுக் கழகமும் 1500 பவுண்கள் வரை கட்டணமாகச் செலுத்தி இருந்தனர்.
கட்டணங்களை ஆர்வமுடன் வசூலித்தவர்கள் அதற்கான சேவையை வழங்கவில்லை. இது பற்றி அறிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. (லண்டன் குரல் பதிப்பிற்குச் சென்ற பின் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள்ள முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய அலுவலகம் சென்று வசந்தன் கிருஸ்ணனைச் சந்தித்தோம். அதன் விபரம் மேலுள்ளது.)
பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பற்ற செயல் விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வசந்தன் விளையாட்டுக் கழகங்களுக்கு யூலை 10, 2010ல் ஒரு மின்அஞ்சலை அனுப்பி இருந்தார். இம்மின் அஞ்சல் லண்டன் குரலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அந்த மின்அஞ்சலில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ”As you all aware, we have come across with some logistical problems in our 5th year Cricket league in 2010”, என வசந்தன் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு தீர்வாக விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களில் இருந்து
1. Organisation committee
2. Team selecting committee
3. Decision making committee
ஆகிய மூன்று குழுக்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இவ்வாறான குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியாது என லண்டன் குரல் தொடர்புகொண்ட விளையாட்டு கழகங்கள் தெரிவித்தன.
அம்பயர் (நடுவர்)களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இன்றித் திரும்பின. அதனால் நடுவர்கள் வராமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. பந்துகளும் வழங்கப்படுவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நடுவருக்கான கொடுப்பனவையும் பந்துகளை வாங்கும் பொறுப்பையும் கழகங்களுக்கே விட்டுவிடுவதாக வசந்தன் தன் மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால போட்டிகளில் நடுவருக்கான பணத்தைக் கட்டியும் நடுவர் வராது இருந்திருந்தால் அத்தொகையை அடுத்த ஆண்டு கண்டனத்தில் கழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு முன்னர் இவ்வாண்டு நடுப்பகுதியில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நிதி நெருக்கடி இருப்பதாகவும் அதற்காக விளையாட்டுக் கழகங்கள் 500 முதல் 1500 பவுண் வரை முற்பணமாகச் செலுத்தினால் யூன் 20 2010 ரூனமன்ற் முடிவில் அப்பணம் கையளிக்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு அவர்கள் கட்ட வேண்டிய லீக் கட்டணத்தில் அவர்கள் செலுத்திய தொகை கழிக்கப்படும் எனவும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் சார்பில் வசந்தன் கேட்டு இருந்தார். இதற்கு சில விளையாட்டுக் கழகங்கள் செவிசாய்த்து பணத்தைச் செலுத்தியும் இருந்தன.
இது தொடர்பாக மகாஜநாக் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட போது தாங்கள் கழகமாக பணம் செலுத்தவில்லை என்றும் தங்களுடைய இரு விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு 750 பவுண் வழங்கி 1500 பவுண்களை பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்திற்கு செலுத்தியதாக புவனேந்திரன் தெரிவித்தார். வேறு சில கழகங்களும் இவ்வாறு முற்பணத்தைச் செலுத்தி இருந்தனர். ஆனால் யூன் 20 ரூனமன்ற் நிறைவு பெற்று இரு மாதங்கள் ஓடிய நிலையிலும் இப்பணம் திருப்பி வழங்கப்படவில்லை. அதுவே வசந்தன் மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தும் வசந்தன் இதனை நடுவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு 20 பவுண் பிரச்சினையாக உண்மையை மறைத்துள்ளார்.
வசந்தனுடைய மின் அஞ்சலுக்கு கடுமையான பதில்களை சில விளையாட்டு கழகங்கள் அனுப்பி வைத்தள்ளன. அவற்றில் சில லண்டன்குரலின் கவனத்திற்கும் அனுப்பப்பட்டு இருந்தது. யூலை 12 2010ல் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சார்பாக கார்த்திக் இவ்வாறு எழுதி இருந்தார். ”Hi Vasanthan, We are also in the same position, Just give us the money back and we have no intention of playing in your league for next year”.
இது பற்றி RLSSC விளையாட்டுக் கழகம் சார்பில் ரஞ்சன் எழுதிய மின் அஞ்சலில் ”Hi Vasanthan, Our club not accepting all this rubbish after five years. What happened to our money we already paid to you?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைக்க லண்டனை தென்கிழக்கு, தென்மேற்கு வடகிழக்கு வடமேற்கு எனப் பிரித்து நால்வரை நியமித்துள்ளனர். அவர்கள் விபரம்
Southeast – Para (Lewshiam CC)
Southwest – Ragulan (Bloomfield CC)
Northeast – Sugumar (Five Star CC)
Northwest – Gobi (Tamil Union CC)
இவர்களில் லூசியம் விளையாட்டுக் கழகம் பரா, ஃபைவ் ஸ்ரார் விளையாட்டு கழகம் சுகுமார் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இவர்கள் பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உறுதிப்படுத்தினர். தங்கள் பகுதிகளில் உள்ள கழகங்கள் அதிருப்தி அடைந்துள்ளதையும் தெரியப்படுத்தினர்.
கடந்த ஐந்த ஆண்டுகளில் எப்போதாவது கணக்கு விபரங்கள் விளையாட்டு கழகங்களுக்கு காட்டப்பட்டதா எனக் கேட்ட போது பராவும் சுகுமாரும் இல்லையென்றே பதிலளித்தனர்.
பரா தனது பதிலில் ‘முதல் மூன்று வருடமும் பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. இப்போது தான் பிரச்சினைகள் எழுந்தள்ளது’ என்றார். அவர் மேலும் கூறுகையில் ‘எனக்கும் இந்த பண நிர்வாக விடயங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு உதவியாக போட்டிகளை ஒழுங்குபடுத்தக் கேட்டார்கள் செய்கிறேன்’ என்றார். ‘இந்த வருடமே பணக் கஸ்டம் என்றால் ஏற்கனவே சில கிளப்புகளிடம் பணம் பெற்றுள்ளதால் அடுத்த வருஸம் எப்படி இருக்குமோ தெரியாது?’ என்றும் பரா சந்தேகத்தை வெளியிட்டார்.
சுகுமார் பதிலளிக்கையில் ‘அப்போது பணம் ஊருக்கு அனுப்பப்படுவதாகச் சொன்னார்கள். நாங்களும் யாரும் கணக்கு கேட்க விரும்புவதில்லை. இப்போது அங்கு பணம் அனுப்ப இவர்களுக்கு வழியில்லை. என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள். பாஸ்ட் இஸ் பாஸ். இனி சரியாகச் செய்ய வேணும் என்று கேட்கிறார்கள். சில கிளப்புகள் கடுமையாக இருக்கிறார்கள். தாங்கள் அடுத்த வருடம் விளையாட வர மாட்டார்கள் என்கிறார்கள்’ என்றார். ‘இந்த வருசம் கிளப்புகள் பணம் செலுத்திவிட்டினம். அடுத்த வருஸம் அவர்கள் குறைந்த தொகையே கட்ட வேண்டி இருக்கும். அடுத்த வருஸம் எப்படிச் சமாளிப்பார்கள் என்று தெரியாது’ என சுகுமாரும் பரா போன்றே சந்தேகம் எழுப்பினார்.
விளையாட்டுப் போட்டிக்கான செலவுகள் அனைத்தும் 60 விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் பெறும் வேறுவேறு கட்டணங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் விளையாட்டுவிழா நுழைவுக் கட்டணம் செவனியர் மூலம் திரட்டப்படும் விளம்பரப் பணம், ஸ்பொன்சேர்ஸ் என்று பன்முகப்பட்ட வருவாய்கள் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உண்டு. இவற்றைவிடவும் விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக்கும் விளையாட்டு வீரர்களின் உறுப்புரிமைக்கும் பெறப்படும் கட்டணம் 750 பவுண் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உரியது. அதாவது ஆண்டுக்கு 45000 பவுண் செலவு தவிர்ந்த பணம். இந்நிலையில் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் நிதிப் பிரச்சினைக்கு உள்ளானதற்கான காரணங்கள் மர்மமானதாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் தெரியாத நிலையிலேயே உறுப்புரிமை செலுத்திய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
லண்டனில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு முன்னரேயே இதில் தேர்ச்சி பெற்ற அமைப்புகள் இருந்தன. கிழக்கு லண்டனில் ஸ்கந்தமூர்த்தி கிரிக்கட் கழகங்களை இணைத்து விளையாட்டுப் போட்டிகளை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடாத்தி வந்தார்.
தாயக மக்களுக்கு உதவுகின்றோம் தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் அனுமதிக்கப்பட முடியாது என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்தப் போட்டது. அதன் பின்னர் தங்கள் விதிமுறைகளை தேவைக்கு ஏற்ப வளைத்தனர். தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் இருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தாய் அல்லது தந்தை தமிழராக இருக்க வேண்டும் என்ற செருகல்கள் அனைத்தும் புகுத்தப்பட்டது. இருந்தும் தாயக மக்களுக்கு சில உதவிகள் கிடைக்கும் என பல விடயங்களும் பொறுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது நிலைமை முற்றாக மாறி உள்ளது.
தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக் கழகம் (Tamil Schools Sports Association – TSSA) கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இது பற்றி அவ்வமைப்பின் தலைவர் ந கெங்காதரன் லண்டன்குரலுக்குத் தெரிவிக்கையில், ‘TSSA என்றுமே விளையாட்டு விழாக்களை போட்டிகளை நடாத்தி நட்டப்பட்டதில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு அறிக்கை கழகங்களின் பார்வைக்கு இருக்கும். பெறப்பட்ட லாபத்தில் மூன்றில் இரு பங்கு போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அதனை அவர்கள் தங்கள் பாடசாலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தவார்கள். மூன்றில் ஒரு பங்கு TSSA இன் வளர்ச்சிக்கு அதன் வைப்பிலிடப்படும்’ எனத் தெரிவித்தார்.
பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் போட்டிகளை நடாத்திய அதே காலப்பகுதியில் தனிப் பாடசாலையாக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி தங்கள் 150 ஆண்டு விழாவைக் குறிக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விளையாட்டுப் போட்டிகளிலும் தாங்கள் சில ஆயிரம் பவுண்களை யாவது லாபமீட்டியதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். தங்கள் வரவு செலவுக் கணக்கு வரும்போது உண்மையான தொகை தெரியவரும் எனத் தெரிவித்த அவர், பாடசாலையின் 150வது விழா என்பதால் தாங்கள் செலவுகளை சற்று அதிகமாகவே மேற்கொண்டதாவும் கூறினார்.
லண்டன்குரலுக்கு கிடைக்கின்ற தகவல்களும் ஏனைய விளையாட்டுக் கழகங்களின் அனுபவங்களும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தில் பாரதூரமான நிதி நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்றிருப்பதையே காட்டி நிற்கின்றது.
arunn
நான் இந்த விளையாட்டுகளுக்கு போனதும் இல்லை இந்த கழகத்தினை பெரிதாக எடுத்தவனும் இல்லை ஆனால் வசந்தனின் திருகுதாளங்கள் நன்றாக தெரியும் …வசந்தன் எப்படி லண்டன் வந்தார் யார் அனுப்பி வைத்தது.. யாரோடு இருந்தது.. யாருக்கு வேலை செய்தது.. (வேலை எண்டு சொன்னால் உடம்பை வருத்தி ஒருநாளும் வேலை செய்தது கிடையாது.) வசந்தனிடம் கேளுங்கள் எங்காவது கஸ்டப்பட்டு வேலை செய்தாரா எண்டு?? ஒரு நாளும் இல்லை.. வேலை செய்யாமல் இந்த தமிழர் விளையாடு கழகத்துக்கு பின்னால திரிந்து கொண்டும் புலிக்கு வால் பிடித்துக்கொண்டும் தான் திரிந்தார்.. நான் கஷ்டபட்டு வேலை செய்தே என்னால் மனேஜ் பண்ண முடியாமல் இருக்கு இவர் எப்படி தன் தம்பிய இங்கு குப்பிட்டார்?… நான் தமிழர் விளையாடு கலகத்தை விமர்சிக்க விரும்பல ஆனால் வசந்தனை வைத்தே கலகத்தை எடை போடுவன்..அதுக்காக யாரும் நினைக்க வேண்டாம் இது ஒரு தனி நபர் விமர்சனம் எண்டு… இவர்களை போல் தில்லு முள்ளு பண்ணியவர்களால் தான் இன்று எல்லாமே தலை கீழாக போனது.. வசந்தன் என்பவர் புனிதமானவர் இல்லை…அவரால் ஒண்டுமே நிருபிக்க முடியாது
Sooryan
தமிழர்களே !! இன்னமும் தமிழர் அமைப்பு என்றிராமல் நீங்கள் இருக்கும் நாட்டில் இருக்கும் கவுண்டியில், இருக்கும் லீகில் (league) உங்களை சேர்த்து வெள்ளைகாரனோடு சேர்ந்து முன்னுக்கு வர பாருங்கள். அதை விட்டு தமிழ் ற்று என்று சொல்லி ரோல்சும், கொத்துரோடியும் வாங்கி சாபிட்டுவிட்டு, இந்த வசந்தன் போன்றவர்களை வளர வைக்காதீர்கள்
BC
அருண், சூரியன் கூறியவை சரியானவை. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் வெள்ளைகளின் விளையாட்டு கழகங்களில் சேர்ந்து விளையாடுவது தான் நல்லது. இந்த மோசடிகாரர்களுக்கு உதவ கூடாது.
மாயா
புலிகள் ஒன்றும் தமது மக்கள் வளர்ச்சிக்காக செய்யவில்லை. தமது குடும்ப மக்கள் வளர்ச்சிக்காகவே செய்தார்கள். செய்கிறார்கள். நீங்கள் வாழும் நாட்டில் , என்ன மொழி தெரியுமோ அதைப் படித்து அவர்களோடு இணைந்து உங்களை உயர்த்திக் கொள்ள முயலுங்கள். அது என்றும் பலன் தரும். தமிழரோடு இணைந்தால் அவர்களது அரசிலுக்குள் வீழ்ந்து விட்டில் பூச்சிகளாகி விடுவீர்கள்
pungudutivan
எனக்கும் தெரிந்தவரை இந்த வசந்தன் ஒரு சுத்துமாத்து போஸ்ட் ஆபீசில வேலைசெய்து ….. இவர் எல்லாம் ஒரு பொது சேவை செய்றார் எண்டால்…. நினைக்க நினைக்க சிரிப்பா வருது…
Nirthanan
//புலிகள் ஒன்றும் தமது மக்கள் வளர்ச்சிக்காக செய்யவில்லை. தமது குடும்ப மக்கள் வளர்ச்சிக்காகவே செய்தார்கள். செய்கிறார்கள். நீங்கள் வாழும் நாட்டில் , என்ன மொழி தெரியுமோ அதைப் படித்து அவர்களோடு இணைந்து உங்களை உயர்த்திக் கொள்ள முயலுங்கள். அது என்றும் பலன் தரும். தமிழரோடு இணைந்தால் அவர்களது அரசிலுக்குள் வீழ்ந்து விட்டில் பூச்சிகளாகி விடுவீர்கள்// மாயா
புலிகள் மக்களுக்காக செய்யவில்லை. BC யும், நீங்களும் போதிக்கிற மாதிரி வெள்ளைக்காரறோட சேருரதிலை எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அப்ப ஏன் நாங்கள் (நீங்கள் உட்பட) தேசம்.னெட்டுக்குள்லும், மற்ற தமிழ் இணய்யங்களுக்குள்லும் சுற்றி, சுற்றி நிக்கிறம். என் மனிசி வெள்ளைகார மனிசி. அதற்காக அவ ஒரு நாளும் சொல்ல இல்லை நான் தனிய வெள்ளைகாரறோட சேர்ந்து தான் என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று.
மகுடி
// புலிகள் மக்களுக்காக செய்யவில்லை. BC யும், நீங்களும் போதிக்கிற மாதிரி வெள்ளைக்காரறோட சேருரதிலை எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அப்ப ஏன் நாங்கள் (நீங்கள் உட்பட) தேசம்.னெட்டுக்குள்லும், மற்ற தமிழ் இணய்யங்களுக்குள்லும் சுற்றி, சுற்றி நிக்கிறம். என் மனிசி வெள்ளைகார மனிசி. அதற்காக அவ ஒரு நாளும் சொல்ல இல்லை நான் தனிய வெள்ளைகாரறோட சேர்ந்து தான் என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று.//
Nirthanan, புலத்தில் எவராவது , தமிழர் அமைப்புகள் ஊடாக ஏதாவது பெரும் பயன் பெற்றிருக்கிறார்களா? அமைப்புகளை அமைத்தவர்களே சுருட்டி வாழ்ந்துள்ளார்கள். புலிகள் காலத்தில் , அவர்களது அனைத்து அமைப்புகளும் புலி சார்ந்தவர்களுக்கே வாய்ப்புகளை வழங்கி வந்தது. ஏனைய அமைப்புகளும் அதையே செய்தன. செய்கின்றன. பணம் கறப்பதற்கு மட்டுமே மக்களை உசுப்பேத்தி பொய்யுரைத்து , மக்களை முருங்கை மரக் கொப்புளில் ஏத்தி , அவர்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்துள்ளன.
உங்கள் மனைவிக்கு எம்மவர் குறித்து தெரியாது? அவருக்கு எமது சமூகம் பிரச்சனையில்லை. அவருக்கு , உங்களால் பிரச்சனை வருமானால் அதுவே பிரச்சனை. இதுதான் ஐரோப்பியர் மனநிலை. ஐரோப்பியர்கள் பணி செய்யும் இடங்களில் உள்ள நிலையும் , குடும்ப நிலையும் மாறுபட்ட தன்மை கொண்டவை. மேற்கத்திய நாட்டு ஒரு நிறுவனம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். குடும்பத்தில் , செலவுகளை சரி பாதியாக பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்வார்கள். காதலர் நிலையில் , ஒன்றாக படுக்கை அறையை பகிர்ந்து கொண்டாலும் , உணவகம் ஒன்றுக்கு போனால் தனியாக பணம் கொடுப்பார்கள். இவை தெரியாதா? ஆனால் , வேலைகளில் , அரசியல் பார்க்க மாட்டார்கள். இவனை பயன்படுத்தி நிறுவனம் ஏற்றம் பெறுமா என மட்டுமே யோசிப்பார்கள். நாம் , இன்னமும் திறமையை விட , நமக்கு அடங்கிப் போகும் , ஒத்துப் போகும் , சார்பானவர்களுக்கே இடமளிக்கிறோம்? இவற்றை தமிழ் அமைப்புகளிலும் பார்க்கலாம்? நாம் இங்கு மொழி தெரியாமல் ஏமாற்றப்படும் அப்பாவிகளுக்காகத்தான் எழுதுகிறோமே தவிர, ஏனையவர்களுக்காக அல்ல.
புலத்தில் குழந்தைகள் ஏன் வாழும் நாட்டு பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும். நம்மவர் கல்வி நிலையங்களில் கற்று தேறலாமே? பயன் பெறலாமே? எம்மவரால் நடத்தப்படும் டியுசன் சென்டர்களை இங்கே அடக்கவில்லை. அவை முறையானவர்களாலும் நடத்தப்படுகிறது. பணத்தை குறியாகவும் வைத்து நடத்தப்படுகிறது. அவற்றை வேறுபடுத்தி பார்க்கும் தன்மை எமக்கு வேண்டும். இல்லாவிட்டால் நம் எதிர்கால சந்ததியை படுகுழிகளுக்கு தள்ளும் செயலை செய்து கொண்டிருக்கிறோம்?
புலிகளால் தொடங்கப்பட்டு , தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களில் புலிகள் பெயர்களில் கொடுக்கப் பட்டிருக்கும் , கொடுக்கப்படும் சான்றிதழ் உயர் கல்விக்காக ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது இவை அங்கீகரிக்கப்படுமா? இவை அனைத்தும் தமது பணப் பைகளை நிரப்பிக் கொள்ளவும் , தமக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் புலிகளால் நடத்தப்பட்டவை. நடத்தப்படுபவை.
தமிழ் இணையங்களில் வலம் வருவதால் , நாம் முற்று முழுதாக , அதற்குள்ளேயே இருக்கிறோம் என்பதாகாது. எமக்கு வேலையுண்டு. குடும்பம் உண்டு. நாம் வாழும் தேசத்து பணிகளை வாழும் தேசத்து மொழிகளில் செய்கிறோம். தமிழ் கற்றிருப்பதால் , புலத்தில் அல்லது இலங்கையில் என்ன நடக்கிறது என இங்கும் எட்டிப் பார்க்கிறோம். தவறாக இருந்தால் கருத்துகளை எழுதுகிறோம். அடுத்த இனத்தவர்களும் , இதையேதான் செய்கிறார்கள். உலகத்தில் அனைவரும் தான் இதையே செய்கிறார்கள். உதாரணத்துக்கு உங்கள் மனைவியை வேறொரு நாட்டுக்கு அழைத்துச் சென்று , அவரது மொழி செய்திகளை ஏன் பார்க்கிறாய் என ஒரு உத்தரவை பிறப்பியுங்கள். அப்போது இதற்கான பதில் தங்களுக்கு கிடைக்கும்.
chandran.raja
நிர்த்தனன்! இந்த உபதேசம் சயினட்தவைருக்கு பின்னால் அணிவகுத்தவர்களுக்கு மட்டுமே!. நீங்கள் அப்படியில்லையென்றால் அது பற்றி கவலைப் படாதீர்கள்.
BC
நிர்தனன், இலங்கையை பற்றிய பல விடயங்களை நடுநிலையோடு சொந்த மொழியில் தேசம்நெற் தருவதால் அதை சுற்றி வர வேண்டியிருக்கிறது. கோப்பியை கூட தேசம்நெற்றை தட்டிய பின் தான் குடிக்க முடியுது. தமிழ் விளையாட்டுக் கழகங்கள் தமிழ் மக்களிடம் இருந்து உள்ளதை உருவி எடுப்பதற்காக புலிகளால் நடத்தப்படுபவை. உங்கள் வெள்ளைகார மனிசி பாவம், இப்படி எல்லாம் தில்லு முள்ளுகள் இருக்கிறது என்று நினைத்திருக்கமாட்டா.
thurai
//என் மனிசி வெள்ளைகார மனிசி. அதற்காக அவ ஒரு நாளும் சொல்ல இல்லை நான் தனிய வெள்ளைகாரறோட சேர்ந்து தான் என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று.//நிர்தனன்
வெள்ளைக்காரரிலும் உயர்வாக வாழ்ந்த ஈழத்தமிழர்கழு முண்டென்பதை முதலில் அறியவும். உயர்வென்பது பழக்க வழக்கங்களாலும், பண்பாடுகளாலுமே உயர்வடைகின்றன. தமிழரிடமிருந்து வெள்ளைகாரர் பழகவேண்டிய்துமுண்டு வெள்ளைகாரரிடமிருந்து தமிழர் பழக் வேண்டிய்துமுண்டு.
நாங்கள் வாழும் நாடுகளில் அந்த நாட்டு மக்கழுடன் இணந்து வாழ்வதன் மூலமே இதனை அடையலாம்.
தமிழ்மொழி,எங்கள் இனம் என்பதெல்லாம் போலி வேடங்களேயாகும். தேசத்தில் இதனை எழுதுவதன் மூலமும் கருத்துப் பரிமாறல் மூலமுமே உண்மைகள் வெளிவரும். தமிழ் அரசிய்ல் புலம்பெயர்நாட்டுத்தமிழர்களிற்கு ஓர் பொழுது போக்கேயாகும்.
(பெண்களிற்கு தமிழகநாடகங்கழும் சினிமாவும், ஆண்களிற்கு இலங்கை அரசியல்.)– துரை