கர்ப்பிணித் தாயொருவரை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பசறை லுணுகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பசறை பங்குவத்தை என்ற இடத்தில் வசித்த ஒரு பிள்ளையின் தாயான எச். என். டி. பியதர்ஷனி வயது (25) என்ற கர்ப்பிணித்தாயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவம் கடந்த சனி இரவு பசறை லுணுகல சூரியகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் லுணுகல பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் லுணுகல சூரியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வை. எம். நெலும்தெனிய முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது: குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் சேவையாற்றி வருகிறார். சம்பவத்துக்கு முதல் நாள் நண்பர் ஒருவரின் திருமணத்துக்காக விடுமுறையில் வந்து தனது மனைவி பிள்ளைகளுடன் நண்பரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளவென பசறை லுணுகல சூரியகொட பகுதியில் அமைந்து இருந்த நண்பனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இரவு அங்கு இடம்பெற்ற திருமண விருந்து உபசாரத்திலும் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அன்றிரவு திடீரென மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது. இந்த வேளையில் குறித்த நபர் சமையலறைக்கு தனது கையடக்க தொலைபேசியின் வெளிச்சத்தில் சென்று அங்கிருந்த கத்தியொன்றை எடுத்து வந்து மனைவி உறங்கிகொண்டு இருந்த அறைக்குள் நுழைந்து மனைவியை குத்திப் படுகாயமடைய செய்துள்ளார்.
அதனையடுத்து சற்று நேரத்தில் மீண்டும் மின்சார இணைப்பு கிடைத்தவுடன் அங்கு படுக்கையில் இருந்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக பெண்ணை லுணுகல வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்டப்போது அவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணைகளை மேற்கொள்ள சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு (12) திகதி மாலை எடுத்துவரப்பட்டு மரண பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின் சடலம் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லுணுகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.