முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு மேற்குப் பகுதிகளில் 409 குடும்பங்கள் நேற்று (14-09-2010) மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
புதுருக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒன்றான விசுவமடு மேற்கிலேயே இக்குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளன. 409 குடும்பங்களைச்சேர்ந்த 1301 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமில் வசித்து வந்தவர்களாவர்.
வெளிமாவட்டங்களில் உறவினர். நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 17ம் திகதி குறிப்பிட்ட பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றப்படுபவர்களில் 445 குடும்பங்களைச் சேர்ந்த 1411 பேர் அடங்குவர் எனவும், இதுவரை முல்லை மாவட்டத்தில் 16ஆயிரத்து 769 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.