இந்திய அரசினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இவை அனைத்துக் குடும்பங்களுக்கும் போதுமானதல்ல என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகரா தெரிவித்துள்ளார். இதே வேளை இவற்றை நிர்மானித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கும், சேதமுற்ற வீடுகளை புனரமைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் இலங்கை வங்கியுடன் இணைந்து குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கடன் வழங்கலுக்காக இலங்கை வங்கி 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், 4வீத வருடாந்த வட்டியுடன் 10 வருடங்களில் மீளச்செலுத்துக்கூடியதாக அதிக பட்சக்கடனாக இரண்டரை இலட்சம் ரூபாவை பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.