வடக்கில் மீள் குடியமரும் மக்களுக்கு இந்தியா வழங்கும் ஐம்பதாயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன் பத்தாயிரம் வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார். நிர்மாணப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் வடக்கில் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்டத்தில் ஆயிரம் புதிய வீடுகள் கொத்தணி முறையில் நிர்மாணிக்கப்படுவதுடன் பத்தாயிரம் வீடுகளைப் புனரமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். பத்தாயிரம் வீடுகளைத் திருத்தும் பணிகள் ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். புதிய வீடுகளை அமைக்கும் முதற்கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஐம்பது வீடுகள் வீதம் இருநூறு வீடுகள் நிர்மாணிக்கப்படும். அத்துடன் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப்படும்.
வீடு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவென இந்திய நிறுவனமொன்றின் அதிகாரிகள் இலங்கை வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், இந்தத் திட்டத்திற்கான முழுமையான ஆளணி வளத்தை இலங்கை அரசு வழங்குவதாகவும் குறிப்பிட்டார். தொழில்நுட்ப உதவிகளை மாவட்டச் செயலகம் வழங்கும். நிர்மாணப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ள நிறுவனம் மேற்பார்வை செய்யும் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.
வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கவென அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய மட்டங்கள் என மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. வீடுகளைப் புனரமைப்பதற்கென இரண்டு இலட்ச ரூபாயும் புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஐந்து இலட்ச ரூபாயும் வழங்கப்படுமென குறிப்பிட்ட அரசாங்க அதிபர், நிர்மாணப் பணிகளுக்கான வரைவாவணங்கள் தயாரிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் பயணாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்திற்கு ஏழாயிரம் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புனரமைப்புப் பணிகள் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். பயணாளிகள் விரும்பினால் மேலதிகமான விரிவாக்கத்தினைச் செய்துகொள்ள முடியும். வவுனியாவில் சுமார் இரண்டாயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனினும், தற்போது மேற்கொள்ளப் படும் ஒதுக்கீடுகளின் பிரகாரம் 1250 வீடுகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியமரும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஆடைத் தொழிற் சாலைகள் மூன்று நிர்மாணிக்கப் படவுள்ளதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், தற்போது வைத்தியசாலை, பாடசாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம், உள்ளிட்ட ‘உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அரச சார் பற்ற நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியாக மாவட்டத்தில் மீள்குடி யேற்றம் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இதுவரை 8114 குடும்பங்களைச் சேர்ந்த 27,414 பேர் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று மீள்குடியேறியிருப்பதாகக் குறிப்பிட்டார். வவுனியா தெற்கிலிருந்து 1990களில் இடம்பெயர்ந்த 812 குடும் பங்களைச் சேர்ந்த 1185 பேரும் சொந்த இடம் திரும்பியுள்ளனர்.
செட்டிக்குளம் மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் முல்லைத்தீவு புதுக்குடி யிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் மாத்திரமே மீளக்குடியமர காத்திருக்கிறார்கள். கண்ணி வெடி அகற்றும் பணிகளும் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. எனினும், மாக மன்குளம் பகுதியில் மாத்திரம் சிறிய பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.