தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் 56 வது பிறந்த தினத்தையொட்டி “சினி புவத்” குறுந்திரைப்படம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இத்திரைப்படத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். அதற்கான இருவட்டுத்தொகுதியை திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் குமார் அபேசிங்கவிடம் கையளித்தார். தகவல் திணைக்களத்தின் திரைப்படப் பிரிவு திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகலவின் வழிகாட்டலில் மேற்படி குறுந்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக இக்குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் சகல சினிமாத் தியேட்டர்களிலும் இதனைத் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல;
30 வருட கால யுத்தம் நீங்கி நாட்டில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகியுள்ளது. இத்தகைய தருணத்தில் பழைய சம்பிரதாயங்களை நாம் மீட்டிப்பார்க்க ‘சினிபுவத்’ போன்ற குறுந்திரைப்படங்கள் உறுதுணையாகின்றன. மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ள தருணம் இது. சுவிற்சர்லாந்தைப் போல இலங்கையை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுகளை 40 வருடகால யுத்தம் பின்னடையச் செய்து விட்டது. அதற்குப் பின்னர் இன்று சிறந்த எதிர்காலமொன்றை எம்மால் சிந்திக்க முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துவது சிறப்பான செயலாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.