அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிடுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற்படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.
அயோத்தி தீர்ப்பால் மத நல்லிணக்கம், அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி, காஷ்மீரில் வன்முறை, பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் என முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று திரிபாதி தனது மனுவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, கடந்த வாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் திரிபாதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.