அமெரிக்கா வில் 41 வயதுப் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் இவர்தான். விர்ஜீனியாவைச் சேர்ந்த அவரது பெயர் தெரசா லூயிஸ். இவர் தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை (இரண்டரை லட்சம் டாலர்) பெறுவற்காக அவரையும், வளர்ப்பு மகனையும் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ ஊசி போட்டு அவருக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தற்போது தண்டனையை நிறைவேற்றி விட்டனர். உள்ளூர் நேரப்படி, விர்ஜீனியாவில் காலை 9.13 மணிக்கு அவருக்க விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும். கிரீன்ஸ்வில்லி சீர்திருத்த மையத்தில் தெரசாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும் நிகழ்ச்சியை அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் நேரில் பார்த்தனர்.
தெரசாவைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 7300 அப்பீல் மனுக்கள் மாகாண ஆளுனருக்குப் அனுப்பப்பட்டன. ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.