இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதமே ஆரம்பமாகும் என யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வதாற்கென நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் குழுவினர் இந்திய அசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் வருகை தந்த இந்தியக்குழுவினர் நேற்றுக்காலை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து வீட்டுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.
இந்திய அரசாங்கமே இந்த வீடுகளைக் கட்டித்தர வேண்டுமா? அல்லது அதற்கான நிதியை மட்டும் வழங்கினால் போதுமா? இது குறித்த மக்களின் கருத்து பற்றி இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரை வினவியதாகவும், யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்தமைக்கு இந்தியக் குழுவினர் இணக்கம் தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் மூன்று மாதங்களில் களநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி மாதம் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.