தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் – பான் கீ மூன்

mainpic1.jpgஇலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடையாதென்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவதற்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் பாராட்டியதுடன், புலிகள் இயக்கத்தினரால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க மேற் கொண்ட நடவடிக்கைகளையும் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.

புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தையும் அதற்கான செயற்பாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார். அரசியல் தீர்வு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் ஐ. நா. செயலாளருக்குமிடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்ட நாளைய முரண்பாடுகளுக்கான காரணத்தையும் அவை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்காக பொறுப்புக் கூறும் தன்மையின் கொள்கைகளுக்கு அமைவாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அந்தக் குழு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஆணைக்கு விசாரணை மேற்கொண்டமை குறித்தும் ஜனாதிபதி விபரித்துள்ளார். இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான தகவல்களை எந்தத் தனி நபரோ அல்லது அமைப்போ கொண்டிருந்தால் அதனைச் செவிமடுப்பதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களில் 90% மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஐ. நா. சபையும் அதன் முகவர் அமைப்புகளும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு தேர்தல்களிலும் ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்து ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு சிறந்த இலக்கை அடையுமென்று தெரிவித்துள்ளதுடன் தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் எனவும் இதனை ஜனாதிபதி பெற்றிருப்பது அவரது தலைமைத்துவ தகைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *