பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த அமைச்சர் பசில்ராஜபக்ச வருகை தரவில்லை. யாழ்.அரியாலைக் கிழக்கில் 450ஏக்கர் விளைநிலத்தை பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்து பெரும்போக நெற்செய்கைக்காக மக்களிடம் கையளிக்கும் ஏர்பூட்டு விழா நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வு உட்பட யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதித் தருணத்தில் அவரது வருகை தவிர்க்க முடியாத காரணங்களினால் தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏர்பூட்டு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பை மக்களிடம் கையளித்து, ஏர்பூட்டும் விழாவை ஆரம்பித்து வைத்தனர்.
கமநலத் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஏர்பூட்டு விழா நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.