வைகாசி மாதம் நடந்த தேர்தலில் தொழிற்கட்சி பதவியிழந்தது. அவர்களின் தோல்வி, 1918ம் ஆண்டுக்குப்பின் தொழிற்கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியாகக் கருதப்பட்டது. பெரும்பாலான பிரித்தானிய மக்களின் எதிர்பார்ப்பு, எட்வேர்ட்டின் தமயனான டேவிட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராக வருவார் என்பதாகும். டேவிட் மிலிபாண்ட், பிறவுன் அரசாங்கத்தில் வெளிநாட்டுத்துறை அமைச்சராகவிருந்தவர். ரோனி பிளேயரின் வாரிசாகக் கருதப்பட்டவர், ரோனி பிளேயரின் வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்படிப்பவர், ரோனி பிளேயர், பிரித்தானிய மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டு ஈராக்குக்குப் படையை அனுப்பியவர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிற்கட்சி அங்கத்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.
ரோனி பிளேயர், ஈராக் நாட்டுக்குப் படை அனுப்பியதைச் சரி என்று இன்னும் வாதாடுபவர். இன்னொரு நாட்டுக்குப் படை அனுப்புவது பற்றிப் பேசும்போது ‘மனித உரிமைகளை எந்த அரசு மீறுகிறதோ அந்நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்குத் தார்மீக உரிமையுண்டு’ என்று சொன்னவர்.
ஆதனால் புலிகளின் ஆதரவாளர்கள் அவரின் மூலம் இலங்கைக்குத் தலையிடி கொடுத்தார்கள். பிரபாகரனைக் காப்பாற்ற டேவிட் மிலிபாண்டை 2009ம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு அனுப்பினார்கள்.
ரோனி பிளேயரின்’ மனித உரிமைகளை மீறும் நாடுகளைக் கண்டிக்க (ஆக்கிரமிக்க?) பிரித்தானியாவுக்குத் தார்மீகக் கடமையிருக்கிறது என்பதைப் பாவித்தும், இலங்கையின் பழைய காலனித்துவ சக்தியென்ற முறையில் பிரித்தானியா இலங்கையிற் தலையிட வேண்டும் என்று புலிகள் எதிர்பார்த்தார்கள். ரோனி பிளேயரின் வாரிசான டேவிட் மிலிபாண்டின் மூலம் வெளிநாட்டுப் படையொன்றை அனுப்ப எடுத்த புலி ஆதரவாளர்களின் அத்தனை போராட்டங்களும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன் 73 நாட்கள் நடந்த சோகமான நாடகமாக முடிந்தது. ( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )
அதன்பின், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைக் காரணம் காட்டி, இலங்கை அரசைக் கூண்டில் நிறுத்தப் புலி ஆதரவாளர்கள், அமெரிக்காவில் டேவிட்டின் அபிமானத்தைப் பெற்றவரான ஹிலாறி கிலிண்டன் தொடக்கம், பல செனேட்டர்களையும் அணுகினார்கள். இந்தியாவும் சீனாவும் இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுத்தடுத்தார்கள்.
தொழிற்கட்சியின் தலைவர் கோர்டன் பிறவுன், 2010ம் ஆண்டு வைகாசி மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததும், டேவிட் மிலிபாண்ட் அந்தத் தலைமைக்குத் தன் பெயரைக் கொடுத்ததும் புலிகளின் ஆதரவாளர்களுக்குப் புத்துயிரைக் கொடுத்தது. டேவிட் மிலிபாண்டைத் தேர்தலில் வெற்றி காண ‘தொழிற்கட்சிக்கான தமிழர்கள்’ (Tamils for Labour) என்ற பெயரில் கூட்டத்தையும் வைத்தார்கள். தேர்தலுக்கு உதவப் பணம் சேர்த்தார்கள். ( ஏழைத் தமிழரின் கண்ணீரில் உல்லாசப் படகோட்டும் புலம்பெயர் தமிழர்கள். : ரதிவர்மன் )
ஆனால் பிரித்தானியாவின் பிரமாண்டமான தொழிற் சங்கங்களான யுனைட், யூனிசன் போன்றவர்களின் ஆதரவால் எட்வேர்ட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகள் பற்றிப் பேசும்போது, ஈராக் நாட்டுக்குப் போர்ப்படைகளை அனுப்பியது சரியான விடயமல்ல என்று எட் மிலிபாண்ட் சொல்லியிருக்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாற்பது வயதான (24.12.1969) எட்வேர்ட்டின் தந்தை தாயார் இரண்டாம் உலகப்போர்க்கால கட்டத்தில் ஹிட்லரின் கொடுமையிலிருந்து தப்பி ஓடிவந்த அகதிகள். இடதுசாரியான எட்வோட்டின் தந்தை முதுபெரும் இடதுசாரியான ரோனி பென்னுடன் வேலை செய்தவர்.
இன்று, இருபதாவது தொழிற்கட்சித் தலைவராக வந்திருக்கும் எட்வேர்ட் ஐந்து வருடங்களின் பின்னர் நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலின்பின் வெற்றி பெறலாம். பிரித்தானியாவின் பிரதமராகவும் வரலாம். ஆனால் பிரித்தானியாவிலுள்ள பொருளாதாரப் பிரச்சினை, குடிவரவுப்பிரச்சினை, குற்றங்களைத் தடுக்கும் சட்ட திட்டங்கள்பற்றிய தெளிவான கண்ணோட்டங்கள் சரிவர உணர்ந்து மக்களின் ஆதரவைப் பெறாவிட்டால் இந்த இளைஞரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவிருக்கும்.
ஓக்ஸ்போர்ட், லண்டன் கொலிஜ் ஒவ் எக்கொனமி போன்றவற்றில் கல்விகற்ற எட்வோர்ட் அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்.
பழைய பிரதமர் ரோனி பிளேயரை எதிர்க்கும் கூட்டத்தால் தலைவராக்கப் பட்டிருக்கிறார். அன்னிய நாடுகளுடன் மோத வேண்டாம் என்று குரல்கொடுப்பவர்களின் ஆதரவு எட்வேர்ட்டுக்கு இருக்கிறது.
ஆனாலும். பழையபடி புலி ஆதரவாளர்கள் இவரை முற்றுகை போடுவார்கள், தூக்கிப்பிடிப்பார்கள் கூட்டம் போடுவார்கள்.ஆனாலும் இவர் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது இலங்கையின் அரசியலில் பெரிதாகத் தலையிடமுடியாது.
இன்று இருக்கும் பிரித்தானிய கூட்டாட்சியின் வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் லியாம் பொக்ஸ், இலங்கையின் அரசியற் தலைமையுடன் பரவாயில்லாத உறவைப் பேணுகிறார். இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருக்கும்வரை மேற்கத்திய வல்லரசுகளால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது என்பது பலருக்கும் தெரியும்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் முன்னொரு காலத்தில் இருந்ததுபோல், நெருக்கமான அரசியல் உறவுகள் இன்று கிடையாது. பழைய காலனித்துவ சக்தியாக பிரித்தானியா இலங்கைக்கு கொடுக்கும் உதவிகள், இராணுவப் பயிற்சி, சில தொழில் நுட்ப உதவிகளுடன் முடிகிறது. ஆனால், இன்று இலங்கையின் பெரும்பாலான இராணுவப் பயிற்சிகள், இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களதேஷ் போன்ற நாடுகளில் நடக்கிறது.
இலங்கையின் மிகப்பெரிய வியாபார உறவுகள், இந்தியா, சீனா, ஈரான், ஈராக், மத்திய தரைக்கடல் நாடுகளுடன் விரிகிறது என்பதால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தன்மை பிரித்தானியாவுக்குக் கிடையாது. ஆனால் தமிழர்களின் வாக்குகளுக்காகப் பிரித்தானியா இலங்கையுடன் முட்டிக்கொள்ளலாம். ஆனால் அதனால் புலி ஆதரவாளர்களுக்கு வரும் பிரயோசனங்கள் மிகக்குறைவாகும்.
புலி ஆதரவாளர்கள் நெருங்கும் தலைவர்கள் துரதிர்ஷ்ட வசமாக நொருங்கித் தள்ளுகிறார்கள். (பிரபாகரன், சரத் பொன்சேகா, ரணில் அன் கோ, வைகோ, ஜெயலலிதா, டேவிட் மிலிபாண்ட்) என்பது நடைமுறை சாத்தியமாகவிருப்பதால், புலி ஆதரவாளர்கள் லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் கென் லிவிங்ஸ்டனைத் தூக்கிக்கொண்டாடி தோல்வியைக் கொடுக்காவிட்டால் நல்லது.
london boy
பிரிதானியர்களால் எமக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது என்றுமே தமது நன்மைக்காகவே எம்மை மோதவிட்ட ஜரொப்பிய அமெரிக்கர்களின் கெட்டித்தனம் இன்றய உலகில் பொய்த்து விட்டதும் இந்தியாவின் வளர்ச்சி இவர்களை அடக்கிவிட்டது.
எமக்கு இலங்கை அரசுடன் உண்மையான கூட்டுறவு முதலாவதாகவும் இந்தியாவுடன் இரண்டாவதாகவும் ஏற்ப்படுத்தப்பட்டு தமிழர்களின் வாழ்வை முன்றேற்ற வேண்டும். ஜரொப்பாவிலிருந்து அரசியலை தத்துவங்களை ஏற்றமதி செய்வதை நிறுத்த வேண்டும்.