வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 151 பெண்கள் உள்ளிட்ட 402 பேர் நேற்று வியாழக்கிழமை காலை உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜயமுனிசொய்ஸா, வன்னி பாதுகாப்புப்படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கே. டி. தல்பதாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்படும். அவர்கள் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு விடுவிக்கப் பட்டுள்ளனர் என பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்.