நீதிமன்றத்தை நாட ஜ.தே.கூ. முடிவு

இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி வரும் என்ற ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாமையால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடப்போவதாக அவர்தலைமை வகிக்கும் ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

நாவல சோலிஸ் ஹோட்டலில் நேற்றுவியாழக்கிழமை நடைபெற்ற ஜனநாயக தேசிய கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி.இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு கையெழுத்திட்டு சரத் பொன்சேகாவுக்கு 30 மாத (இரண்டரை வருடங்கள்) கடூழியச் சிறைத் தண்டனையை ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். நாம் இந்த இராணுவ நீதிமன்றத்தையும், அதன் தீர்ப்பையும் ஏற்க தயாராக இல்லை. ஏனெனில் இது பக்கச் சார்பான தீர்ப்பு. நாம் ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அக்டோபர் 8 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் விரைவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளோம். இராணுவ சட்டத்தின் 79 ஆவது சரத்தானது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்ல உரிமை இருப்பதாக விதைந்துரைக்கிறது. அதன் பிரகாரமே நாம் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்கிறோம்.

இதேநேரம், சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பொறுத்த வரையில், சிவில் நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதென அரசியலமைப்பில் கூறப்படுகிறது. எனினும் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரது பாராளுமன்ற உரிமை பறிபோகும் என்று எங்கும் கூறப்படவில்லை. அந்த வகையில் நாம் இந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை சிவில் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்குட்படுத்தி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய தீர்ப்பொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். நாம் இவ்விடயத்தில் அதிகபட்ச நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்போம். சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன, மத, குல பேதங்களின்றி அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *