பொன்சேகா வேண்டுகோள் விடுத்தால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனைக் காலம் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஜனாதிபதி விரும்புவதாக பத்திரிகையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி ஐலன்ட் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை பொன்சேகாவின் 30 மாத சிறைத்தண்டனைக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இராணுவ நீதிமன்றத்தின் பரிந்துரையை மீள்மதிப்பீடு செய்ய ஜனாதிபதி தயாராகவுள்ளார். பொன்சேகாவின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை மீள்பரிசீலனை செய்ய அவர் தயாராகவிருந்தார் என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக சிவில் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக பொன்சேகாவின் கட்சியான ஜனநாயகத் தேசியக் கூட்டணி நேற்று முன்தினம் தெரிவித்தது.