நல்லிணக்கக் குழு பயங்கரவாத தடுப்பு பிரிவுடன் பேச்சு

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னியில் பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டு கொழும்பு திரும்பியதும் ஆணைக்குழுவின் தலைவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேசியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்ற பகிரங்க அமர்வுகளில் சாட்சியமளித்த பொது மக்கள், காணாமற் போன தமது உறவுகளைத் தேடித் தருமாறும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் ஆணைக் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, அவர்களின் கோரிக் கைகளை விபரங்களுடன் எழுத்து மூலம் பெற்றுக் கொண்ட அவர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அறிவிப்பதாக உறுதி அளித்திருந்தார்.

இதற்கமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்து ஆணைக் குழுவின் தலைவர் பேச்சு நடத்தியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், பேசப்பட்ட விடயங்கள், ஆணைக்குழுத் தலைவரின் பரிந்துரைகள் என்னவென்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில், ரி.ஐ.டி. யினருடன் கலந்துரையாடியதன் பின்னர் பரிந்துரைகளை முன்வைப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இம்மாத முற்பகுதியில் நடைபெறவிருந்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன தெரிவித்தார். ஆணைக் குழுவின் விசாரணை யாழ்ப்பாணத்தில் நடைபெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒக்டோபர் ஒன்பதாந் திகதி முதல் பதினோராந் திகதி வரை மட்டக்களப்பில் விசாரணை நடைபெறும் என ஆணைக் குழு அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் பொதுமக்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டார். கொழும்பு 7 ஹோட்டன் பிளேசிலுள்ள ஆணைக் குழுவின் அலுவலகத்தில் நேற்றைய தினம் யூ. பி. விஜேகோன், பேராசிரியர் ரொகான் குணரட்ன, ஃபிறைடே போரத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் சாட்சியமளித்தனர். கென் பாலேந்திரா நேற்றைய தினம் சாட்சியமளிக்க வருகை தரவில்லை.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் ஐந்தாம் மற்றும் ஏழாம் திகதிகளிலும் விசாரணைகள் நடைபெறும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *