யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணையம் எனபனவற்றினால் யாழ். பாடசாலை மாணவர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீருடையுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மாற்றுடைகளையும் அவர்களின் பைகளில் எடுத்துச் செல்வதாகவும், பாடசாலை விட்டதன் பின்னர் மாற்றுடையுடன் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாகவும், இணைய வசதிகள் வழங்கும் (நெற்கபே) நிலையங்களுக்குச் சென்று ஆபாச இணையத்தளங்களைப் பார்வையிடுவதாகவும், கையடக்கத் தொலைபேசி மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளில் – கட்டடங்களில் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குறித்த கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நடைபெற்ற இக்கூட்டம் தொடர்பாக அரசாங்க அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் விழிப்பாக இருக்க வேண்டும். அவர்களின் புத்தகப் பொதிகளை தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து கவனமாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும். இணைய நிலையங்களின் உரிமையாளர்கள் 18 வயதிற்கு குறைந்த மாணவர்களை இணையத் தளங்கள் பார்வையிட அனுமதிக்கின்ற போது தடுப்புகளற்ற திறந்த வெளியமைப்பில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்ட சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளை பொலிஸாரின் உதவியுடன் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Kumar
பிரித்தானிய சமூக வரலாற்றிலும் 1940களின் பின்னர் குடும்ப உறவுமுறைகளிலும் சமூக உறவுமுறைகளிலும் பாரிய மாற்றங்கள் எற்பட்டன. மீளச்செல்லமுடியாத இந்த சமூக மாற்றங்கள் நீண்டகாலப் போரின் பின்விளைவுகளேயாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் இனம்காணப்பட்ட மாற்றங்கள் யாழ்ப்பாணத்தக்க மாத்திரம் உரியதொன்றாகக் கருதமுடியாது. ஒட்டுமொத்த இலங்கைக்கும் உரியதாகும். பாலியல் வன்முறைகள். போதைப்பொருள் பாவனை>சிறிய பிரச்சினைகளுக்கும் கொலையெ முடிவாகுதல் என்பன இச்சமூக மாற்றத்தின் அண்மைக்கால அறுவடைகளாகும். தனிப்பெற்றோர் முறைமைகள் இலங்கையில் நடைமுறையில் சாதாரணமானவையாக விரைவில் அங்கு மாற்றம்பெறும் வாய்ப்ப்புள்ளது.
தாமிரா மீனாஷி
அதிகாரம் தனது பாய்ச்சலைக் காட்டி பயமுறுத்தும் செயலை இளம் சிறார்களிடமும் பிரயோகிப்பது கண்டிக்கப் பட வேண்டியது.. சமூகத்தில் மிகச் சிறுபான்மையான ஒரு பகுதி மாணவர்கள் செய்யும் செயலை தூக்கிப் பிடித்து முழு மாணவர்களையும்,தமது கால்களின் கீழ் அடங்க வைத்து மகிழ்வது வளர்ந்தவர்களின் மனநோயன்றி வேறு எதுவுமல்ல..இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிக்குக் கொண்டுவர ஆக்கபூர்வமாக என்ன செய்யலாம் என்று ஏன் வளர்ந்தவர்களால் சிந்திக்க முடியவில்லை? இண்டெர்னெட் நிலையங்கள் யாரால் நடத்தப் படுகின்றன? ஆபாச சினிமாக்களை காட்டுவது யார்? இந்த நபர்கள் குறித்த அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகள் எவ்வளவுக்கு பலமானவை? இவர்கள் மீதான சமூக மதிப்பீடுகள், அவற்றை உருவாக்கும் மீடியாக்கள் என்ன செய்கின்றன? மாநாடுகளைக் கூட்டுவதும், அம்மாநாடுகளில் அவசர அரை அவியல் பிரசங்கங்களை மேற்கொள்வதும் எவ்வித தூரநோக்கோ அல்லது ஆக்க பூர்வமான சிந்தனையோ இன்றி செயல்படுவதும் எமது சமூகத்தைப் பீடித்துள்ள பெரு வியாதி…