யாழ். குடாநாட்டில் இளவயதில் தாயாகும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட தாய் சேய் நல மருத்துவர் திருமதி. திருமகள் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓரிரு வருடங்களில் இத்தொகை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு இளம் வயதில் காப்பமாகும் பெண்களுக்கு 35 வயதிற்குப்பின் கருப்பைக் கழுத்து புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இளவயது பிரசவங்களால் பிரசவ நேரச் சிக்கல்கள், தாயின் குருதிச்சோகை காரணமாக அதிக இரத்தப்போக்கு, இதனால் தாய் மரணிக்கும் நிலமை, குழந்தையின் எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு பல்வேறு சமூகப்பிறழ்வுகளும் ஏற்படக்கூடிய நிலையுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
குடாநாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு 442 பெண்களும், 2009ஆம் ஆண்டு 374 பெண்களும், கடந்த ஆறு மாதக்காலத்தில் 234 பெண்களும் இளவயதில் தாயாகியுள்ளதாக பதிவுகளின் மூலம் தெரியவருவதாகவும் அவர் தெரிவித்தார்.