கொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு நேற்று மட்டும் இதுவரை 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ககன் நரங், அனீஷா சையத், ஓம்கார் சிங் ஆகியோர் நேற்று தங்கப் பதக்கங்களை வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியில் ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார். மேலும் மல்யுத்தப் போட்டியில் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கின்து. நேற்றுக் காலையில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப் போட்டியில் 103.6 புள்ளிகள் பெற்று நரங் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2008ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்திய சாதனையை அவரே முறியடித்தார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, இந்தப் போட்டியில் 103 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஏற்கெனவே நேற்று நடந்த போட்டியில் இவர்கள் இருவருமே சேர்ந்து இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், துப்பாக்கி சுடும் போட்டியின் 25 மீ. பிரிவில் இந்திய வீராங்கனை அனீஷா சையதும் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம்கார் சிங்கும் தங்கம் வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியின் 58 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார்.
மல்யுத்தம் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார். இத்துடன் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.