நாட்டில் 2066 கிராம உத்தியோக த்தர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டபிள்யூ. ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம். பி. தயாசிறி ஜயசேகரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்: நாடெங்கிலும் 2066 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக இப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படும். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியையும், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியையும் பெற்றிருப்பவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் தகுதி பெற்றவர்களாவர்.