பெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு 2010ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. பெரு நாட்டு அதிபர் தேர்தலில் முன்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் லோசா. சிறந்த எழுத்தாளர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஸ்பானிஷ் மொழி பேசும் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர் லோசா.
74 வயதாகும் லோசாவை வெகுவாகப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக் கமிட்டி, அரசியல் அதிகாரம் குறித்த அவரது அலசல், தனி நபர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் நிலை, அதில் அவர்கள் அடையும் தோல்விகள், புரட்சிகள் குறித்து மிகுந்த ஞானத்துடன் எழுதி வருபவர் லோசா என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் 60களிலும், 70களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் பெரும் புகழ் பெறவும், பிரபலம் அடையவும் வித்தாக அமைந்தவர்களில் மிக முக்கியமானவர் லோசா என்றும் புகழ்ந்துள்ளது.
லோசா, 30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் புகழ் பெற்றவை கான்வர்சேஷன் இன் கதீட்ரல், தி கிரீன் ஹவுஸ் ஆகியவையாகும். 1995ம் ஆண்டு இவருக்கு ஸ்பானிஷ் மொழி இலக்கிய வட்டாரத்தில் அளிக்கப்படும் உயரிய விருதான கார்வன்டஸ் பிரைஸ் கிடைத்தது.
பெருவின் அரிக்யூபாவில் பிறந்தவர் லோசா. இவரது பெற்றோர் விவாகரத்து வாங்கியதால் பொலிவியாவில் தனது தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பின்னர் 1946ல் மீண்டும் பெரு திரும்பினார்.அங்கு ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு லிமா மற்றும் மாட்ரிட் நகர்களில் இலக்கியம் மற்றும் சட்டம் பயின்றார். 1959ல் பாரீஸுக்கு இடம் பெயர்ந்தார். மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். ஏஎப்பி எனப்படும் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ்ஸேவில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் டிவியிலும் வேலை பார்த்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர்.இப்போது கூட பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.
1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அல்பர்டோ பிஜிமோரியிடம் தோல்வியுற்றார். பின்னர் 1994ம் ஆண்டு ஸ்பானிஷ் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் மீதான அடக்குமுறைகளை தைரியமாக தட்டிக் கேட்கும் புரட்சிவாதியாகவும் திகழ்பவர் லோசா என்பது அவருக்கான கூடுதல் சிறப்பாகும்