அமைச்சர் பீரிஸ¤க்கு எதிரான – நம்பிக்கையில்லா பிரேரணை 107 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

gl.jpgவெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ¤க்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐ. தே. க. கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 107 மேலதிக வாக்குகளால் நேற்று தோற்கடிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு எதிராக 139 வாக்குகளும் ஆதரவாக 32 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இப்பிரேரணைக்கு எதிராக ஆளும் தரப்பினருடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு வேளையில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ. தே. க.வின் பல எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

இப்பிரேரணைக்கு ஆதரவாக ஐ. தே. க. எம்.பி.கள் வாக்களித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவை நியமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஜீ. எஸ். பி. பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் கிடைப்பதற்கு வழி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தவறியுள்ளார்.

அதனால், அவர் அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதில் இச்சபை நம்பிக்கை இழந்துள்ளதெனக் குறிப்பிட்டு ஐ. தே. க. எம்.பிக்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்கா, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தனர்.

இப்பிரேரணை மீதான விவாதத்தை எதிர்த் தரப்பில் கம்பஹா மாவட்ட எம்.பி. ஜோன் அமரதுங்க தொடக்கி வைக்க ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் மைத்திரபால சிறிசேன விவாதத்தை ஆரம்பித்தார். இவ்விவாதத்திற்கு ஆளும் தரப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பதிலளித்து உரையாற்றினார். இப்பிரேரணை மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சிகளின் எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

இப்பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *