கிளி நொச்சியில் யுத்தத்தின் விளைவாக தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன. கிளிநொச்சியில் தற்கொலை முயற்சியிலீடுபடுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மனநல மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார். நாளொன்றிற்கு நான்கு பேர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், யுத்தத்தின் பின்னான விரக்தி இல்லது மனநோய் இதற்கு காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது கணவரை இழந்த விதவைகள், காணாமல் போனோரின் மனைவிமார் அதிகமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு முன் மனநோயாளிகளாக இருந்த 300 பேரில் நூறு பேர் காணாமல் போயுள்ளனர். யுத்தத்தினால் மனநோயாளிகளாகியுள்ள மற்றும், பாடசாலைகளுக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தற்போது ஐந்நூறு மனநோயாளிகள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ளனர். இவர்களின் இந்நிலைக்கு இவர்களது நெருங்கிய உறவினர்கள் காணாமல் போயுள்ளமையும், இடப்பெயர்வுகளினால் ஏற்பட்ட துன்பங்களுமே காரணம் என இவர்களுடன் உரையாடுகின்ற பொது தெரியவருகின்றது. மனநோயாளிகள் தங்கவைக்கபட்டுள்ள கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் மாடியிலுள்ள 2ஆம் விடுதியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள பலர் முயன்றுள்ளனர். – இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.