சேவை ஒப்பந்தத்தின்படி ஊதியம் வழங்குமாறு லிபியாவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை மேற்கொண்ட இலங்கைப் பணியாளர்களை மீட்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. லிபியாவின் நிறுவனத்துடன் இலங்கை வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு மேலாக குறித்த நிறுவனம் இலங்கைப் பணியாளர்களிடம் சேவைக் கொடுப்பனவை அறவிடுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
இந்தத் தகவலை அறிந்திராத இலங்கைப் பணியாளர்கள் ஒப்பந்தத்தின் படி தங்களுக்கு ஊதியம் வழங்குமாறுக் கோரி ஆர்பாட்டங்களை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சட்டவிரோதமாக கொண்டு நடத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகங்கள் குறித்து தகவல் வழங்குமாறு கிங்ஸிலி ரணவக்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.