ஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றாலும் அல்லது சிறையில் இறந்தாலும் கூட தான் ஒருபோதும் விஷமிகளின் முன்னால் மண்டியிடமாட்டேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொன்சேகா இதனைத் தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தலைநகர் கொழும்பின் வீதிகளில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஊர்வலம் சென்றனர்.அவரின் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பணியாளர்களும் அவரின் மனைவி அனோமா பொன்சேகாவும் வெலிக்கடைச் சிறைச்சாலையை நோக்கிச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அவர்கள் கறுத்த ஆடைகளுடன் சென்றனர். “குரூரமான இந்தப் பழிவாங்கல்களுக்கு முடிவு கட்டுங்கள்” என்று வாசகம் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை அவர்கள் கொண்டு சென்றனர். செப்டெம்பர் 30 இல் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற பாரியதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக நேற்றைய நிகழ்வு காணப்பட்டது. எமது யுத்த கதாநாயகனுக்கு தவறாக வழங்கப்பட்ட நீதியை சீர்படுத்துவதற்கான முயற்சி இதுவென ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி. திரான் அலஸ் கூறியுள்ளார்.