முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடமிருந்து பதிலொன்று கிடைக்கப்பெறுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நீண்ட பட்டியலொன்றைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கையளித்துள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், அவற்றைப் பரிசீலித்து ஒரு வாரகாலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, ஆணைக்குழுவின் தலைவர் சில்வா கொழும்பு திருப்பியதும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஓமந்தைத் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர், இளைஞர், யுவதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் விடுதலை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடியதையும் தெரிவித்தார். இது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஒருவார காலத்தில் சாதகமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.