Friday, September 17, 2021

சிதைவடைந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழரின் வரலாற்று ஆதாரங்கள். : அ மயூரன்

Yamuna Eri”கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” போன்ற உணர்வூட்டி உசுப்பேத்தும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரலாற்று முதுசம்களை பேணுவதில் நாம் காட்டுவதில்லை. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.

யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது ”யமுனா ஏரி” எனப்படுகிற மன்னர்கள் பயன்படுத்திய ப வடிவ தடாகம்.புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.

யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விழிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.

Sangiliyan Manthiri Manai Jaffnaஅடுத்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள ”மந்திரிமனை”. இது ஓர் புராதன மாடி வீடு.பிரதான வாசலிலிலே அவ் வீடு பற்றி சாசனம் ஒன்று பழந் தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம்.அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது.

முன்பு ஒரு முறை அங்கு செல்கையில் ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கி இருந்தார்கள். எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்தார். இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப் பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.

King Sangiliyan Palace Entranceஅடுத்தது யாழ் பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று. பழைய அரண்மனையின் சிதைவு இது என்கிறார்கள். இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை. அதனை யார் எப்போது அமைத்தார்கள் என்பது தெரியவில்லை.) அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள். அண்மையில் நல்லூரில் நட்சத்திர விடுதியொன்று இதற்கு அண்மையில் கட்ட முற்படுகையில் எங்கள் கலாசார காவலர்கள் (!!??) பொங்கி எழுகையில் இது பற்றிய விழிப்புணர்வு ஓரளவு மக்களிற்கு ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியாக எங்கள் மரபுவழி முதுசங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது. எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை. அத்துடன் இலங்கை அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் ஒரு ஈழத்தமிழர் புராதன அருங்காட்சி சாலை.

Museum_in_Jaffnaஅத்துடன் நல்லூரில் நாவலர் றோட்டில் நாவலர் கலாச்சார மண்டபத்திற்குப் பின்னால் யாழ் நூதண சாலை உண்டு. அதன் கேவலத்தைப் பாருங்கோ. 

எத்தனை எத்தனை வீரபுருஷர்கள் மாமன்னர்களாய் ஆண்ட தேசம் இந்த யாழ்ப்பாண இராச்சியம். அந்த அரசாட்சிகளின் சுவடுகளைக் காவல்காக்கும் கலா நிலையமான நூதனசாலையின் கோலத்தைப் பாருங்கள். சாயமிழந்த நூற்சேலை பிச்சைக்காரியின் உடலை மறைப்பது போல ஒரு கட்டிடம். அதுவும் நாவலர் மணிமண்டபத்துக்குப் பின்புறமாகஇ கழிப்பறை போல ஏனோ தானோவென்ற அங்கீகாரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை என்ற கல்விப்பீடம் மூலம் அறிஞர்கள் பலரை உருவாக்கி அங்கீகரிக்கக் காரணமாகவும் இருந்த இந்தக் கலைக்களஞ்சியங்கள் கடைசிக்காலத்தில் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் போல இருக்கும் நூதனசாலை.

Related Articles:

வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொல்பொருட்கள்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • கனிமொழி
  கனிமொழி

  மயூரனின் முயற்சி பாராட்டத் தக்கது. ஈழத் தமிழரின் வரலாற்று ஆதாரங்கள் மட்டும் சிதைந்து விடவில்லை. ஈழத் தமிழர்கள் என்னும் ஒரு சமூகமே இன்று அதனை வழிகாட்ட வேண்டிய கல்விமான்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் அட்டூழியங்களால் புற்று நோய் வந்த நோயாளியாய் மரித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் சமூகத்தைப் பொறுத்த வரையில், இலங்கையில் அதற்கான நிலைபேறு மரிந்து கொண்டே போகின்றதென்றால் – அதற்குக் காரணம் வழிநடத்த வேண்டிய பெரிய மனிதர்கள் செய்கின்ற குழறுபடிகள்தான் என்றால் அது மிகையாகாது.

  யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் பேராசிரியர்கள் இலங்கை தமிழ் பேசும் சமூகத்தின் நிலைபேறும் காத்திரமும் தொடர்பாக இக்காலத்தில் ஆய்வுகள் செய்திருக்கின்றார்களா?

  Reply
 • நந்தா
  நந்தா

  யாழ்ப்பாண இராசதானி இருந்த மண் முன்னர்(1956 க்கு முன்னர்) யாழ் மாநகர சபயின் பொறுப்பில் இருந்தது. யாழ் பஸ்நிலையத்துக்கு காணி தேவை என்றவுடன் அந்த இராசதானி மண்ணை இராமையா செட்டியாருக்கு கொடுத்து தற்போதைய பஸ்நிலையத்தை ஸ்தாபித்தனர். இராமையா செட்டியார் அந்தநிலத்தை கூறு போட்டு பலருக்கு விற்றூ விட்டார்.

  தமிழ் என்று குதித்த செல்வனாயகம். பொன்னம்பலங்களும் சரி, ஆயுதப் போராட்டம் என்று கொலை, கொள்ளைகளில் இறங்கியவர்களும் சரி. யாழ் பலகலைக் கழகத்தில் உத்தியோகம் கிடைத்த வரலாற்றுப் பேராசிரியர் கும்பல்களும் சரி அந்த புராதன “மண்ணைக்” காப்பதற்கு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.

  ஒருமுறை யாழ் பல்கலைக் கழத்தில்நடந்த வரலாற்று கலந்துரையாடலின் போது இதனை அங்குநின்ற ஒரு பேராசிரியர் (குணசிங்கம் என்றுநினைக்கிறேன்) ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் “இந்தநல்லூர் விஷயத்தை தோண்டினால் பக்கத்திலுள்ள கைக்கோளர்கள் அரசனின் உறவினர்கள் என்று சொல்ல வேண்டி வரும். அவங்கள் “பெரிய ஆள்க்களாகிவிடுவான் கள்” என்றும் எச்சரிக்கை செய்தார்.

  யாழ்ப்பாண மன்னர்கள் பற்றி எதுவும் எழுதப்படாமல் “தமிழ்” என்ற மன்னர்களின் பெயர்களை மாத்திரம் எழுதிவிட்டு போய்விடும் எமது வரலாற்று ஜாம்பவான் களின் போக்கிரித்தனத்தை அப்பொழுது புரிந்து கொண்டேன்!

  கோட்டை வாயில் என்று தற்போது கானப்படும் வாயில் தமிழ் மன்னர்களினால் கட்டப்பட்டது அல்ல. ஒல்லந்த கவர்னர் யாழ் இராசதானியில் கட்டியிருந்த விடுதி வாசலின் எச்சமெ அது!

  யமுனாரி என்ற யமுனா ஏரி மாத்திரம் கட்டுரையாளர் குறிப்பிட்டது போல பற்றைக்குள் அமிழ்ந்துள்ளது. இப்போது யாருடைய கையில் அந்தக் காணியும் உள்ளது என்பது தெரியவில்லை.

  2000 ஆண்டு வரலாற்றுப் புலுடா விடுபவர்கள் யாழ் மன்னர்களின் மண்ணையே “சுவாகா” பண்ணி விட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள மக்கள் தமிழர்களை விட லட்சம் மடங்கு மேலானவர்கள்.

  Reply
 • Kumar
  Kumar

  திரு மயூரனின் கட்டுரை வெறும் கருத்தாடல்களுடன் நின்றுவிடக்கூடாது. ராமையாச் செட்டியாரின் வம்சங்களைத் தேடிப்பிடித்து காணியை மீட்கிறது என்பது நடக்கிற காரியமாகப்படவில்லை. ஆயினும் இன்று மயூரனின் கடைசிப்படத்தில் காட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண நூதனசாலையையாவது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பொறுப்பெற்று> பல்கலைக்கழகத்தில் கிருஷ்ணராஜா> புஷ்பரட்ணம்> சத்தியசீலன் போன்றோர் பரிபாலித்தவரும் பல்கலைக்கழகத்தின் வரலாற்று நூதனசாலையுடன் இணைத்து தூசுதட்டி பரிபாலித்துப் பாதுகாக்கவேண்டும். இதற்கான நிதித்திட்டமொன்றை தேசம்நெற் முன்னெடுத்தால் என்னைப்பொன்றவர்கள் சிறிதளவாவத நிதிப்பங்களிப்பினைச் செய்யலாம். அதற்கு வரலாற்றுத்துறைக்கு நம்பிக்கையூட்டும் தொடர்பாடலை தேசம்நெற் முன்னெடுக்கவேண்டும். சவறும்வாயை மென்றுகொண்டிராமல் நாமாவது காத்திரமான ஒரு செயலை செய்வதற்கு ஒன்றுபடுவோமாக. சிறுதுளி பெருவெள்ளம்.

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  தகவல்களுக்கு நன்றி பல கட்டுரைகளை தொடர்ந்து எழுதவும்.

  Reply
 • kamali
  kamali

  “ஆமை கிடத்துவது மல்லாத்தி; நாமது சொல்லிற் பாவம்”

  Reply