சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி ஊரத்தி, சங்கானை மத்தி ஆகிய பிரதேசங்களில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளான மக்களுக்கு இன்னமும் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி உதவுமாறும் குறிப்பிட்ட மக்கள் வடமாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
“சங்கானை மத்தியில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வாழ்நது வருகின்றோம். எம்முடன் வாழ்ந்த 21 குடும்பங்களுக்கு 1979 இல் உள்ளுராட்சி சபையின் விசேட ஆணையாளராக அப்போதிருந்த இராசு தணிகாசலம் என்பவரால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள எமக்கு காணி உரிமம் எவையும் வழங்கப்படவில்லை.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்குமாறு மாகாணசபை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். ஆனாலும், தீர்வு எதுவும் இது வரை எட்டப்படவில்லை. எனவே சங்கானை மத்தி, அராலி ஊரத்தியிலுமுள்ள 65 சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்கி, அவற்றுக்கான உரிமங்களையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்” என இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.