காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை வாவியிலிருந்துகொண்டு பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தொந்தரவு கொடுத்து வந்த மற்றொரு முதலையை பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து பிடித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்தார்.
நேற்று மதியம் இம்முதலை பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இதே மாதிரியானதொரு முதலையை காத்தான்குடி வாவியில் பொது மக்கள் பிடித்து அடித்துக் கொன்றனர்.
இம்முதலை மீனவரான 60 வயதுடைய தம்பிலெப்பையை கடித்து குதறி படுகொலை செய்ததுடன் அதிகளவிலான கால் நடைகளையும் கடித்து நாசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.
October 18 2010
மட்டக்களப்பு வாவியில் முதலைகளால் தொல்லை.
மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அம்பலாந்துறை வாவியோரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளது. இதனையடுத்து 12 அடி நீளமான முதலையொன்று மீனவர்களால் வலை போட்டுப் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.
கடந்த வாரம் குறித்த வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது. காத்தான்குடி வாவியிலும் முதலைகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பொறுப்புள்ள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலந்தர் லெப்பை மொகமட் பரீட் தெரிவித்துள்ளார்.