மகாவலி பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி உறுதிப்பத்திர பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 40 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:- மகாவலி பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் காணி உறுதிப் பத்திரங்கள் தொடர்பாகப் பெரும் பிரச்சினைக்கு நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்தார்கள். இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் மகாவலி பிரதேசத்தில் வாழ்பவர்களுக்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் இத்திட்டத்தின் கீழ் இற்றைவரையும் 40 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காணி அமைச்சின் ‘பிம்சவிய’ திட்டத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன்.
காணி உறுதி வழங்கும் நடவடிக்கை தாமதமடைவதற்கு நில அளவையாளர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகும். இப்பிரச்சினையை துரித கதியில் தீர்த்து வைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதேநேரம், மகாவலி பிரதேசங்களில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
மொரகஹகந்த நீரப்பாசனத் திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் ஹெக்டேயர் நிலம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இது பராக்கிரம சமுத்திரத்தை விடவும் நான்கு மடங்கு பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ள 1581 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய நிலத்தையும் இழப்பவர்களுக்கு மாற்று இடத்தில் இருப்பிடமும், விவசாய நிலமும் வழங்கப்படும்.
மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் மக்களுக்கும், வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு குவைத் நிதியமும், ஜய்க்கா நிறுவனமும் நிதியுதவி வழங்குகின்றன.என்றார்.
Kusumpu
சரி காணி உறுதி கொடுக்கிறீயள் நல்ல விசயம் தான் யாருக்குக் கொடுக்கிறியள்? வன்னிலை காணியளை எடுத்து ஆமிக்குக் குடுக்கிறியள். வன்னிமக்களை யாழ்பாணம் போகவிடாமல் கம்பிபோட்டு வைச்சிருக்கிறியள். ஆனால் தெற்கிலை இருந்த சிங்களவரை வடக்கை அனுப்புகிறியள். வடக்கை சிங்களவர்கள் வந்து வித்துவத்தன்மையைப் பார்ப்பது முக்கியமா? அல்லது வன்னிமக்களை சாதாரண வாழ்நிலைக்குக் கொண்டுவருவது முக்கியமா?