மக்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுகின்றது. இந் நிவாரணம், யுத்தத்தால் மரணமடைந்த ஒரு பிரிவினருக்கும், காயமடைந்து அங்க குறைபாடுடையவர்களுக்கு ஒரு பிரிவாகவும், யுத்தத்தால் சொத்திழப்படைந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினருக்காகவும் 100 பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக இருபத்தைந்து மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.அவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவித்து வருகின்றோம். இது வரை 4860பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்ட முகாமில் 300 பேர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்.
இவர்களுடன் தடுப்பு முகாமில் இருந்த பெண்கள் வயோதிபர்கள், சிறுவர்கள் அங்கவீனமானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்பவர்களில் 1000 பேர் வரை சட்ட நியதிக்கமைய விசாரணைக்குட்படுத்தப்படுவர் அவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் நிரபராதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவர்களும் விடுக்கப்படுவர். தடுப்பு முகாமில் இருப்பவர்களில் 10 சதவீதத்தினர் பாடசாலை செல்லாதவர்கள், எழுபது சத விகிதத்தினர் 3, 5, 8 ம் ஆண்டு வரை கற்றவர்கள். இவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியையும் கல்வியையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. வட பகுதி மக்கள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அநேகமானவராவர். 80 சத வீதமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அமைச்சு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது என்றார்.