அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்கள் என்பவற்றில் இருக்கும் சிற்றுண்டிச் சாலைகளில் உடன் உணவு (Fast Food) இனிப்பு பானங்கள் ஆகியவற்றின் விற்பனை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட சுற்று நிரூபம் உடனடியாக சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன நேற்று தெரிவித்தார். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் உடன் உணவு (Fast Food) இனிப்பு பானங்கள் என்பவற்றின் விற்பனை உடனடியாகத் தடை செய்யப்படவிருக்கின்றது.
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களும், பானங்களும் மாத்திரமே பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் தொடர்பாகவும், அவற்றின் தரம் குறித்தும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார அதிகாரிகள் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ள உள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் எலும்பு பலவீனம், நீரிழிவு, கண் நோய்கள், உடல் பருமன் உட்பட பல தொற்றா நோய்கள் பெரிதும் அதி கரித்துள்ளன. இது சுகாதாரத் துறையினரின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கைக்குப் பங்களிப்பு செய் யவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
வேளாவேளைக்கு காலை உணவை உட்கொள்ளாமல் உடன் உணவு (Fast Food) வகைகளையும், இனிப்பு பானங்களையும் உட்கொள்வதற்கு பெரும்பாலான மாணவர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மத்தியில் போஷாக்கின்மையும், நீரிழிவும், உடல் பருமனும் பெரிதும் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போஷாக்கு மிக்க உள்ளூர் உணவுப் பொருட்களை உண்பதற்கு எமது மாணவ சமூகத்தைப் பழக்கிக்கொள்ளும் போது நோய்கள் பலவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத் துக்கொள்ள முடியுமென பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.