மேல் மாகாணத் தமிழ் சாகித்திய விழா பிரதான நிகழ்வுகள் இன்று மாலை மூன்று மணிக்கு கொழும்பு- 10 மருதானை- எல்பின்ஸ்ரன் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் சாகித்திய விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எஸ். இராஜேந்திரன் தலைமைதாங்குவார்.
மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண கலாசார அமைச்சர் உபாலி கொடிகார, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் எம். பீ. மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன், முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், மேல் மாகாண பிரதம செயலாளர் விக்டர் சமரவீர, மேல் மாகாண கலாசார அமைச்சின் செயலாளர் ஏ. ராமநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன், லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், தொழில் அதிபர்கள் சுந்தரம் பழனியாண்டி, ஜே.பி. ஜெயராம் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.
மேல் மாகாணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 25 பேர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். நம் நாட்டு கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பிக்கும். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் விருது பெற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப் படுகிறது.