யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.