முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பிரதேசங்களில் கடும் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதோடு, பல கிணறுகள் மாசடைந்து துப்புரவாக்கப்படாமலும் காணப்படுகின்றன. இதனால் அங்கு மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் குறிப்பிட்ட சில கிணறுகளையே பயன்படுத்தி வருகிறனர் குடிநீரை இக்கிணறுகளில் எடுத்து வர நீண்ட தூரத்திற்கு செல்ல வேண்டிய சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடிநீரை பணம்கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.
இதேபோல் கிளிநொச்சிப் பகுதிகளிலும் பல கிணறுகள் துப்புரவாக்கப்படாமல் உள்ளதால் மக்கள் குடிநீருக்கு வேறு இடங்களில் உள்ள கிணறுகளைத் தேடிச் செல்ல வேண்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வன்னியில் உள்ள பொதுமக்களின் கிணறுகள் பல மண் கிணறுகளாக காணப்படுவதால் அவை மாசடைந்து காணப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளில் நீர் இறைத்துக் கொடுக்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கட்டுக்கிணறுகளை மட்டுமே இறைத்துகொடுப்பதாகவும் மண்கிணறுகளை இறைத்துக் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.