நுண்கலைப்பட்டதாரிகள் 3174 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற போதும் நேர்முகப் பரீட்சையொன் றின் மூலம் தகுதிகள் உறுதிசெய்யப்பட்ட பின்னரே ஆசிரிய நியமனம் வழங்கப் படுமெனவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் நுண்கலைப் பட்டதாரிகள் தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமெனக் கோரி கல்வியமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதனால் உடனடியாக ஆசிரியர் நியமனங்களை வழங்க முடியாது. அதற்கு சில நியமங்கள் உள்ளன. கடந்த 9ம் திகதி போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 15ம் திகதி நடாத்தப்படவுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கே ஆசிரிய நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.