‘இலங்கைத் தொழில் இல்லம்’ நேற்று திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் அலுவலகத்தில் தொழில் உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினி லொக்குகேயினால் இது திறந்து வைக்கபட்டது.
இந்த நிறுவனம் தனியார் துறை உட்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள உதவுதல், தொழில் வாயப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நோமுகப் பரீடசைகளுக்கு தயார் படுத்தல், சுயவிபரக்கோவையைத் தயாரித்தல், தொழில் பயிற்சிகளை வழங்குதல், தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கல்வித்துறைகளைத் தெரிவு செய்தல் முதலான வழிகாட்டல்களை வழங்கும். இலங்கையிலுள்ள பதினெட்டு மாவட்டங்களில் இந்நிறுவனம் எற்கனவே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலும் இந்நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் இரண்டாவது கிளையாக நேற்று யாழ்ப்பாணத்தில் இது திறக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தொழில் இல்லக் கிளையில் 250 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புகளுக்காக பதிவுகளை மேற்கொண்டனர்.