தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதை இந்திய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் என்கின்ற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டு உள்ளது.
இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வழங்கிய தகவலின் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்தள்ளது.
ரஜீவ்காந்தி கொலைவழக்கின் 01ஆவது குற்றவாளியான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் 02ஆவது குற்றவாளியான சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுவதாக ரஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்துவரும் சென்னை தடா நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளின் இறப்புகளுக்குப் பின்னர் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் இல்லாது போகின்றமை குறிப்பிடத்தக்கது.
‘இந்தியா இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை’ ஆகவே அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற கதைகளை புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் இன்னமும் பரப்பி வருகின்ற நிலையில் இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது. தமிழக வர்த்தகப் பத்திரிகைகளும் இத்தலைவர்கள் உயிருடன் உள்ளதாக பரபரப்புச் செய்திகைள வெளியிட்டு வருகின்றமை தெரிந்ததே.