இந்தோ னேஷியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 108 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 502 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.
இந்தோனேசியாவின், மேற்குப் பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.
நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி. மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன.
இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மல்கோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 அவுஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.