கடந்த 23 ஆம் திகதி பசறையில் இயங்கி வரும் அகில இலங்கை இந்திய வம்சாவளி மேம்பாட்டு மையத்தின் விஷேட ஒன்றுகூடலும் புனரமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவும் பசறை கோவில் கடை “வீ என் ஆர் பீபல்ஸ் பவுண்டேஷன்” காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மலையக மக்களின் கல்வி கலாசாரம், சுகாதாரம், மேம்பாட்டு தொடர்பான கலந்துரையாடப்பட் டதோடு, எதிர்வரும் சர்வதேச தேயிலை தினம் தொடர்பாகவும் ஆலோசிக்கப் பட்டது.
அமைப்பின் உப தலைவர் பீ.டி.ஜே. சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டதோடு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டு மலையக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.
எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி கொண்டாடப்பட விருக்கும் மடுல்சீமை நகரத்தில் இடம்பெறவுள்ள “சர்வதேச தேயிலை தின வைபவத்தில் பல கலை, கலாசார நிகழ்வுகளும், விருது வழங்கல் நிகழ்வும் 2010 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பசறை வலய கோட்டத்தின் கீழ் வரும் சுமார் 30 பாடசாலை மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அன்றைய கூட்டத்தில் நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் தலைவராக எல். வரதராஜன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக வீ. நிரோஷன் (அதிபர்), பொருளாளராக தியாகு ஜே.பி., உப தலைவராக பீ.டி.ஜே. சந்திரசேகரம் (ஜே.பி), உப செயலாளராக எம். ஞானப்பிரகாசம் (ஜே.பி.) நிர்வாக செயலாளராக எஸ். சதாசிவம் (ஜே.பி), நிர்வாக இயக்குநராக எஸ். அந்தோனிசாமி மற்றும் சர்வதேச தொடர்பாடல் இயக்குநராக பிரபல ஊடக நிகழ்ச்சி ஒங்கிணைப்பாளர் ஆர். கேதீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.