தென் கொரியாவில் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கான அடிப்படை தகைமையாகக் கருதப்படும் கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை நாளை 30ம் திகதியும், மறுநாள் 31ம் திகதியும் கொழும்பில் 13 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை இப்பரீட்சைக்கு 29583 பேர் தோற்ற உள்ளனர். இந்தப் பரீட்சையினை சுயாதீனமான முறையில் நடாத்தும் முகமாக இம்முறை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்தப் பரீட்சை நடாத்தப்பட உள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இதேவேளை பரீட்சைகள் நடத்தப்படும் தினங்களில் 700 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாட்டின் ஒருசில பிரதேசங்களில் பரீட்சை மோசடியில் ஈடுபட சிலர் முயற்சித்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அவ்வாறான செயல்களைத் தடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பெறப்பட்டுள்ளதெனவும் இவ்வாறான தகவல்கள் பற்றி அறிந்தவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரது 0112422176 அல்லது வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைகள் பிரிவின் முகாமையாளர் 0112864118 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் கிங்ஸ்லி ரணவக்க பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.