2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. மேற்படி மனு பிரதம நீதியரசர் அசோக த சில்வா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான சிராணி ஏ. பண்டாரநாயக்க, கே. ஸ்ரீபவன், பி.ஏ. தயாரத்ன, எஸ்.ஐ. இமாம் ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் நஷ்டஈடு எதுவும் இன்றி மனுவை நிராகரிப்பதாக அறிவித்தது. 29 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை பிரதம நீதியரசர் அசோக த சில்வா திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஐந்து பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மனுதாரர் முன்வைத்துள்ள நிவாரணங்கள் சட்டபூர்வமற்றவை. அவற்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது. மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ள தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் மனுவொன்று பூர்த்தி செய்ய வேண்டிய சட்ட தேவைகளை இந்த மனு நிறைவு செய்யவில்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை ஆகிய பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
தனக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவு வாக்குகள் கிடைக்காமல் போனதை உறுதி செய்ய மனுதாரர் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. மனுதாரர் குறிப்பிடுவது போல தேர்தலில் முறைகேடு நடைபெற்றால் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். ஆனால் தேர்தலை ரத்து செய்யுமாறு மனுதாரர் கோரவில்லை. கோராத நிவாரணமொன்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜனாதிபதி அலரி மாளிகையில் விருந்துபசாரங்கள் நடத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டிருந்தார். ஆனால் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினருடன் கூட்டம் நடத்த முடியும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டதாக கூறப்பட்ட போதும் தனக்கு ஆதரவு வழங்கிய ஆதரவாளர்களின் அல்லது கட்சிகளின் பெயர்களை முன்வைக்க அவர் தவறிவிட்டதாகவும் அதில் கூறப் பட்டது. இதனடிப்படையில் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஐ.ம.சு. முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி யீட்டினார். சரத் பொன்சேகா 40.15 வீத வாக்குகளையும் பெற்றார்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் முறை கேடாக நடைபெற்றதாக கூறி சரத் பொன் சேகா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ, போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் ஆணையாளர், சரத் கோங்கஹகே, ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக், சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப் படுவதை ரத்துச் செய்து தன்னை முறை யாகத் தெரிவான ஜனாதிபதி என அறி விக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். இந்த மனு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடங்களான பிரதி வாதிகள் பூர்வாங்க ஆட்சேபனை முன் வைத்தனர்.