சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நஃபீக் சவூதியில் பணிப் பெண்ணாகத் தொழில் புரிந்த வீட்டு எஜமானரின் கைக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ரிஷானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பல மனித உரிமை அமைப்புகள் மனுச் செய்திருந்தன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இவற்றை நிராகரித்த சவூதி உயர் நீதிமன்றம் ரிஷானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில், ரிஷானா எந்தவேளையிலும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ரிஷானாவை மன்னிக்குமாறு சவூதி மன்னருக்கு கருணை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார். சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், மன்னரின் அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *