தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள நிலையில் இந்த அமைப்பில் மலையக மக்கள் முன்னணியை இணைத்துக் கொள்வது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியவருகிறது.
மலையக மக்கள் முன்னணி தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரனுக்கும் அரங்கத்திலுள்ள தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்குமிடையில் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இதன்போது மலையக மக்கள் முன்னணியை இணைத்துக் கொள்வது குறித்து அடுத்த தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தின்போது அரங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளுடன் பேசி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் சாந்தினி சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கூடவிருந்தது. எனினும் இக்கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகள் அமைப்பு என பத்து நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.இதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இணைந்து செயற்படுமாறு அரங்கத்தினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். அரங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிப்பதன் மூலம் அது வலுவுள்ளதாக அமையுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.
ranjith
நல்ல செய்தி வாழ்த்துக்கள்