இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பின் ஊடாக ‘ஜல்’ சூறாவளி இன்று கரையை கடக்கிறது

jal.jpgவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ‘ஜல்’ சூறாவளியாக உருமாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் வடக்கே தமிழக கரை நோக்கி செல்லும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி யாழ்ப்பாணத்திலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ‘ஜல்’ சூறாவளி மணிக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியான கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.

‘ஜல்’ புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான மழை பெய்வதுடன் கடல் பரப்பிலும் கொந்தளிப்பு ஏற்படும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை பெய்வதுடன் அது தொடர்ச்சியான மழையாக இருக்க மாட்டாது.

காலநிலை மந்தமாகவே காணப்படும். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு, அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இப்பகுதிகளில் இடைவிடாத கடும் மழை பெய்வதுடன் இடி மின்னலின் தாக்கமும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது.

‘ஜல்’ புயல் இலங்கையை அண்மிப்பதற்கு முன்னரேயே நேற்று வடக்கு, கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாகவே காணப்பட்டதுடன் மழை பெய்யவும் ஆரம்பித்தது. ‘ஜல்’ புயல் காற்று இலங்கைக்கு வடக்கே நகரும் போது இன்று மாலை அல்லது இரவு வடக்கு, கிழக்கில் கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

தமிழகத்தை நோக்கி புயல்காற்று நகர்ந்து செல்வதால் தமிழக வாநிலை அவதான நிலையம் தமிழக மக்களையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கையில், கடும் புயலாக உருவெடுத்துள்ள ‘ஜல்’ நேற்றுக்காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னையிலிருந்து 650 கி. மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு புதுச்சேரி, நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வாநிலை ஆய்வு நிலையம் கூறுகிறது. இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி. மீ. வரை புயல் காற்று வீசும். புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும். கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *